தமிழகத்தில் பிளஸ்1, பிளஸ்2 தேர்வில் மாற்றம் கொண்டு வரப்பட்டதற்கான அரசாணை வெளியீடப்பட்டுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-
‘‘11 மற்றும் 12-ம் வகுப்புகளில் 1,200 மதிப்பெண்கள், 600 மதிப்பெண்களாக குறைக்கப்படும். நடப்பாண்டு முதல் 11ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும். தேர்வு நேரம் 3 மணி நேரத்தில் இருந்து இரண்டரை மணி நேரமாக குறைக்கப்படும்.
பள்ளி வேலை நாட்களில் மாணவர்களுக்கு 1 மணி நேரம் பயிற்சி, சனிக்கிழமைகளில் 3 மணி நேரம் பயிற்சி அளிக்கப்படும். இதன் மூலம் மாணவர்கள் எதிர்காலத்தில் அதிக திறன் உள்ளவர்களாக உருவாகுவார்கள்’’ என்றார்.
மேலும், அவர் கூறுகையில், ‘‘செய்முறை கையேடுகளை மாணவர்களுக்கு வழங்கப்படும். மாவட்டத்தில் இருக்கும் பொதுநிலை பட்டதாரிகளுக்கு தற்காலிக பணிகள், அரசு பள்ளிகளில் வழங்கப்படும். பெற்றோர், ஆசிரியர் சங்கம் இந்தத் தற்காலிக பணியாளர்களை தேர்ந்தெடுக்க உறுதுணையாக இருப்பார்கள்.
2018-19 கல்வியாண்டில் 1, 6,9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கும், 2019-2020ம் கல்வியாண்டில் 2,7,10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கும், 2020-2021 கல்வியாண்டில் 3,4,5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பாடத்திட்டம் மாற்றப்படும். நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்’’ என்றார்.
செங்கோட்டையன் தொடர்ந்து பேசுகையில், ‘‘சிறந்த கல்வியாளர்களை வைத்து பாடத்திட்டத்தில் மக்கள் மன ஓட்டத்துக்கு இணையாக மாற்றங்கள் கொண்டு வரப்படும். அனைத்துத் தரப்பினர் கருத்தும் பாடத்திட்டம் வரைவுக்குப் பெறப்படும். புதிய பாடத்திட்டத்தை பயிற்றுவிக்க ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும்.
11-ம் வகுப்பில் தோல்வி அடையும் மாணவர்கள், தொடர்ந்து 12-ம் வகுப்பில் படிப்பார்கள். 11ம் வகுப்பில் தோல்வியடையும் மாணவர்கள், ஜூன், ஜூலை மாதங்களில் நடைபெறும் இடைத்தேர்வில் எழுதலாம். தமிழகத்தில் முதுநிலை ஆசிரியர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது’’ என்று தெரிவித்தார்.