சென்னை: இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் புழல் சிறையில் உள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
கடந்த 2009ம் ஆண்டு சென்னை ராணி சீதை மகாலில், “நான் குற்றம்சாட்டுகிறேன்” என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய வைகோ விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசினார். இதை இந்திய இறையாணமைக்கு எதிரான பேச்சாக கருதி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
சென்னை ஆயிரம்விளக்கு போலீஸார் தேசதுரோக வழக்கின் கீழ் வைகோவை கைது செய்தனர். பிறகு அவர் ஜாமீனில் வெளியே வந்தார். ஆனாலும் இந்த வழக்கு எழும்பூர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்தது.
இந்த நிலையில் கடந்த ஏப்.3-ஆம் தேதி வைகோ எழும்பூர் நீதி்மன்றத்தில் ஆஜராகி வழக்கை விரைவில் முடிக்க வேண்டும் அல்லது தன்னை கைது செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.
இந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதி கோபிநாத், ஜாமீனில் செல்கிறார்களா என்று கேட்டதற்கு வைகோ மறுத்தார். இதையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து ஜாமீன் பெறுவதில் விருப்பமி்ன்றியே இருந்தார்.
இந்த நிலையில் வைகோ ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை எழும்பூர் நீதிமன்றத்தில் நாளை நடைபெற இருக்கிறது.