நக்மா குஷ்பு ஆகியோருடன் ரஜினியை ஒப்பிட்டு பா.ஜ.க. தேசிய செயலாளர் ஹெச். ராஜா பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் ரசிகர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், அரசியல் பிரவேசம் குறித்தும் பேசினார். அவர் நேரடி அரசியலுக்கு வரப்போவதாக மீண்டும் பரபரப்பு எழுந்தது. இது குறித்து வாதப்பிரதிவாதங்கள் சமூகவலைதளங்களில் தொடர்ந்து நடந்துவருகிறது. அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இது குறித்து கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் திருநாவுக்கரசர், “ரஜினிகாந்த் தனிக்கட்சி துவங்க வேண்டும். அவர் பாஜகவில் இணையக்கூடாது” என்று தெரிவித்தார்.
இது குறித்து பாஜக தேசிய செலாளர் ஹெச். ராஜாவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது அவர், “நடிகைககள் நக்மா, குஷ்பு ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்கள். அப்போது நாங்கள், “காங்கிரஸ் கட்சியில் சேராதீர்கள். தனிக்கட்சி துவங்குங்கள்” என்று கூறவில்லை” என்று ரஜினியை, குஷ்பு, நக்மாவுடன் ஒப்பிட்டு கிண்டலாக பதில் அளித்தார்.
மேலும் அவர் பேசுகையில், “தமிழகத்தில் ஆட்சி அமைக்க பாஜக முயல்வதாக குற்றம்சாட்டுவது போல சிலர் சொல்கிறார்கள். நாங்களும் ஒரு அரசியல் கட்சிதான். இந்தியா முழுமைக்குமாக ஆட்சி அமைத்த நாங்கள், தமிழகத்திலும்.. மாநில அரசை அமைக்க ஆசைப்படுவதில் தவறில்லை.
தற்போதைய தமிழக சூழலை பயன்படுத்தி இங்கு ஆட்சி அமைக்க திட்டமிட்டு செயலாற்றி வருகிறோம். இதை வெளிப்படையாகவே சொல்கிறேன்” என்றும் ராஜா தெரிவித்தார்.