டெல்லி:
காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்டு வரும் வன்முறையை கட்டுப்படுத்த பாஜ சார்பில் முதல்வர் நியமனம் செய்யப்படுவாரா? என்ற கேள்விக்கு பாஜ மேல் மட்டத்தில் இருந்து ஆம் என்று பதில் கிடைத்துள்ளது.
‘‘காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முப்தி சமீபத்தில் டெல்லி வந்தபோது இந்த ஆலோசனை முன்வைக்கப்பட் டுள்ளது. கூட்டணி கட்சி என்ற அடிப்படையில் 6 மாதத்திற்கு ஒரு முறை முதல்வரை சுழற்சி முறையில் மாற்றுவது குறித்த ஆலோசிக்கப்பட்டுள்ளது’’ என சிஎன்என்&நியூஸ்18 செய்தி வெளியிட்டுள்ளது.
‘‘இந்த கருத்து மெஹபூபாவிடம் பல தருணங்களில் முன்வைக்கப்பட்டது. காஷ்மீரில் நிலவும் அதிருப்தியை சமாளிக்க மாற்று முதல்வர் நியமிக்கும் திட்டத்தை அவர் தொடர்ந்து ஏற்க மறுத்து வருகிறார்’’ என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறுகையில்,‘‘ இது தொடர்பாக எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை. பாஜ அமைப்பு சார்ந்த கட்சி. எந்த முடிவானாலும் மேல்மட்டத்தில் விவாதித்து தான் இறுதி செய்யப்படும்.
பாஜ&பிடிபி கூட்டணியை காஷ்மீர் மக்கள் விரும்புகின்றனர். அதனால் ஒரு அங்குலம் கூட கூட்டணியை விட்டுக் கொடுக்க மாட்டோம். கடந்த தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள் தான் எங்களை விமர்சனம் செய்கிறார்கள். அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்படுகின்றனர்’’ என்றார்.
காஷ்மீர் பிரச்னைக்கு பாஜ முதல்வர் என்பது தீர்வை ஏற்படுத்துமான என்ற கேள்விக்கு ஜிதேந்திர சிங் பதில் கூறுகையில்,‘‘எனது உதம்பூர் தொகுதி மக்கள், ஜம்மு, லடாக் பகுதி மக்கள் பயங்கரவாதம் மற்றும் வன்முறையால் பாதிக்கப்படக் கூடாது’’ என்றார்.
ஸ்ரீநகர் எம்பி பரூக் அப்துல்லா முதல்வர் மாற்றம் குறித்து கூறுகையில்,‘‘ இந்த முயற்சி தோல்வியை சந்தி க்கும். இது நடக்கும் என்று நான் நம்பவில்லை. இது பிடிபி&பாஜக கூட்டணி ஆட்சி தான். பிடிபி.யால் செய்ய முடியாததை பாஜக எப்படி செய்யும். முட்டாள்களின் சொர்க்கத்தில் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கவர்னர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும்’’ என்றார்.
கடந்த ஆண்டு புர்ஹான் வானி மரண சம்பவம் முதல் மெஹபூபாவின் செல்வாக்கு சரிந்து வருகிறது. பிடிபி&பாஜ கூட்டணி தான் வன்முறை அதிகரிப்புக்கு காரணம் என்ற கருத்தும் நிலவுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு பொதுநிகழ்ச்சியில் கலந்துகொள்வதை தவிர்க்க வேண்டிய நிலை மெஹபூபாவுக்கு ஏற்பட்டது. பாகிஸ்தான் ஆதரவு கோஷம் எழுப்பி அவருக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தவிர்க்க வேண்டிய கட்டாய முடிவை எடுத்தார்.
இது குறித்து முப்தி கூறுகையில், ‘‘நான் முதல்வர் பதவியை விட்டுக் கொடுக்கப் போவதில்லை. தேவைப்பட்டால் கவர்னர் ஆட்சி வரட்டும். தேர்தல் நடக்கட்டும். என்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்றால் தான் நான் முதல்வர் பதவியை விட்டுக் கொடுப்பேன்’’ என்றார்.