சென்னை:
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை துவங்கியதை அடுத்து, பேருந்துகளை இயக்க மாற்று ஏற்பாடுகளை அரசு செய்துவருவலதாக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.
போக்குவரத்து ஊழியர்கள், ஏழு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (15ம் தேதி) முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என அறிவித்தனர். இந்த நிலையில் சென்னை பல்லவன் இல்லத்தில் போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஊழியர்களின் ஓய்வூதியம், நிலுவைத்தொகைக்கான பணம் ரூ.7,000 கோடியை அரசு வேறு செலவினங்களுக்கு செலவழித்துவிட்டது. அதை உடனடியாக திருப்பித்தர வேண்டும் என்று ஊழியர்கள் வற்புறுத்தினர். அமைச்சரோ ரூ.1,250 கோடி தர ஒப்புக்கொண்டார்.
இதை ஊழியர்கள் ஏற்கவில்லை. இதையடுத்து அறிவித்தபடி நாளை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என்று ஊழியர்கள் முடிவுசெய்தனர்.
இதையடுத்து இன்று மதியத்தில் இருந்தே பல ஊர்களில் பேருந்துகளை பணிமணையில் விட ஆரம்பித்தனர் இதையடுத்து தமிழகத்தில் பெரும்பாலான ஊர்களில் அரசு போக்குவரத்துக்கழக பேருந்துகள் இயங்கவில்லை.
இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இதையடுத்து பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுத்து வருவதாக போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
பணிமனை ஊழியர்களை கொண்டு அரசுபேருந்து இயக்கப்படும் என்று உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் தற்காலிக ஓட்டுநர்களைக் கொண்டும் பேருந்து இயக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.