வெற்றியின் அளவுகோல் வருமான வரி!
8. சிறு வியாபாரிகளும் வருமான வரியும்…..
‘உழைப்பாளிகளுக்காக’ உழைப்பதாகச் சொல்லிக் கொள்கிற, பாட்டாளி மக்களுக்காகவே வாழ்வதாகப் பேசுகிறவர்கள் எல்லாரும், அமைப்பு சார் தொழில்கள், தொழிலாளர்களுக்காக மட்டுமே பேசுகிறார்கள்; எழுதுகிறார்கள்; ‘பாடுபடு கிறார்கள்’. இவர்களைத் தாண்டி, ஒரு சில பிரிவினர் இருக்கிறார்கள்.
அவர்களை யாரும் ஏறெடுத்தும் பார்ப்பது இல்லை.
தமிழகத்தில் மட்டும், 10 லட்சத்துக்கு மேற்பட்ட குறு, சிறு வணிகர்கள் இருக்கிறார்கள்.
தலையில் சுமையை வைத்துக் கொண்டு கூவிக் கூவி விற்கிற பூக்கார அம்மா, தயிர்க்கார பாட்டி எல்லாம், ‘சிவப்பு வண்ணக் காரர்களுக்கு’ மனிதர்களாகவே தெரிவது இல்லை.
சங்கம், கொடி, சந்தா இருந்தால் மட்டுமே, அவர்களின் ‘மனித உரிமை’ பற்றிப் பேசலாம். இது எதுவுமே இல்லையா…? இவர்கள் இருந்தால் என்ன…. போனால்தான் என்ன… ?
எதற்கு இத்தனை கடுமையான விமர்சனம் இப்போது…?
சிறு வணிகர்களை வருமான வரிச் சட்டம் எவ்வாறு அணுகுகிறது…?
மிக நிச்சயமாகப் போலித்தனம் இல்லாத உண்மையான அக்கறை தெரிகிறது. இந்த வேறுபாட்டை உணர்ந்து கொள்ளத்தான் மேற்சொன்ன விமர்சனம். மற்றபடி எந்த அரசியல் உள் நோக்கமும் சிறிதும் இல்லை.
சிறு வணிகர்களுக்கு என்று தனியே எந்தச் சட்டமும் இல்லைதான். ஆனால் சில சலுகைகள் வழங்கப்பட்டு உள்ளன. இவற்றை ‘சலுகைகள்’ என்று விளிப்பதும் கூடத் தவறுதான். காரணம் சட்டமே கூட அப்படிச் சொல்லவில்லை.
த.நா. விற்பனை வரிச் சட்டப்படி, ஆண்டுக்கு 10 லட்சத்துகு உட்பட்ட விற்பனை உள்ள வணிகர்கள், கணக்குப் புத்தகங்கள் எழுதி வைத்திருக்கக் கட்டாயம் இல்லை.
‘ஜி.எஸ்.டி’ இதனை 20 லட்சம் ரூபாயாக உயர்த்தி உள்ளது. அதாவது, ஆண்டுக்கு 20 லட்சம் ரூபாய் வரையிலான விற்பனை உள்ளவர்கள், கட்டாயமாக கணக்குப் புத்தகங்கள் எழுதி வைத்து இருக்க வேண்டும் என்கிற நியதி இல்லை.
ஆனால், ‘இன்புட் க்ரெடிட்’ (input credit) பெறுவதற்கு, கணக்கு வைத்து இருந்தால்தான் முடியும்.
இது குறித்து விரிவாக, ஜி.எஸ்.டி. பகுதியில் பார்க்கலாம். இப்போதைக்கு, வருமான வரிச் சட்டம் என்ன சொல்கிறது… பார்ப்போம்.
கணக்குப் புத்தகம் முறையாக இல்லாத பட்சத்தில், ஆண்டு விற்பனையில் எட்டு சதவீதம் (8% of annual turnover) வருமானமாகக் கணக்கிடப்பட்டு அதன் மீது வரி விதிக்கப் படும்.
அதாவது ஓர் ஆண்டு முழுவதுக்கும் சேர்த்து, பத்து லட்சம் ரூபாய் வரைதான் விற்பனை ஆயிற்று என்றால், இதில் 8%ஆன 80,000 ரூபாய், வரிக்கு உட்பட்ட வருமானமாகக் கணக்கில் கொள்ளப் படும்.
2,50,000 ரூபாய் வரை, வருமான வரி இல்லை என்பதால், இவர் வரி ஏதும் செலுத்த வேண்டியது இல்லை.
ஆக, ஆண்டுக்கு 30 லட்சம் ரூபாய் வரை ஆண்டு விற்பனை செய்யும் சிறு வணிகர்களுக்கு வருமான வரிச் சுமை அறவே இல்லை. ஏற்கனவே பார்த்து இருக்கிறோம் – 2.5 லட்சத்தில் இருந்து 5 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 10% வருமான வரி. இதை வைத்து ஒரு, சிறிய கணக்கு பார்த்து விடுவோமா…?
ஆண்டு விற்பனை – 30 லட்சம் வரை – வருமான வரி – ஏதும் இல்லை.
ஆண்டு விற்பனை – 60 லட்சம் வரை – 30 லட்சத்துக்கு மேல், 60 லட்சத்துக்கு உட்பட்ட தொகையின் எட்டு சதவீதம் வருமானம்; இதில் 10 சதவீதம்தான் வருமான வரி.
இந்தக் கணக்குப் படி, ஆண்டு விற்பனை 60 லட்சம் இருந்தால், அந்த ஆண்டுக்கு அவர் கட்ட வேண்டிய அதிக பட்ச வருமான வரி அநேகமாக ரூபாய் 25,000 ஆக இருக்கலாம். ஏறத்தாழ ஒரு மாதத்துக்கு 2200 ரூபாய்.
இதையே வேறு ஒரு கோணத்தில் பார்த்தால் இன்னமும் தெளிவு கிடைக்கும்.
ஆண்டுக்கு 60 லட்சம் விற்பனை என்றால், சராசரியாக ஒரு நாளைக்கு சுமார் 16,666 ரூபாய்க்கு விற்பனை இருந்து இருக்கும். இதில், வருமான வரி எவ்வளவு வருகிறது தெரியுமா…? சுமார் 69 ரூபாய். அதாவது, சுமார் 17000 ரூபாய்க்கு விற்றால், சுமார் 70 ரூபாய் வருமான வரியாகக் கட்ட வேண்டும்.
இதைத்தான் வரிச் சுமை, வரித் தொல்லை, வரிக் கொடுமை என்றெல்லாம் பேசிக் கொண்டு திரிகிறார்கள் சிலர். உலகில் மிகக் குறைவான வருமான வரி விகிதம் உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
மொத்த விற்பனையில் 8% வருமானம்; அதில் 10%தான் வருமான வரி. அதிலும் முதல் 2.5 லட்சம் வரையிலான வருமானத்துக்கு வரி இல்லை. ஆக இந்த ஒற்றைக் கருத்தை மனதில் நிறுத்திக் கொள்வோம் –
ஆயிரம் ரூபாய்க்கு ஒரு பொருளை விற்றுக் கிடைக்கிற வருமானத்தில், வருமான வரி – ஜீரோவில் இருந்து அதிக பட்சமாக 8 ரூபாய் வரை செலுத்த வேண்டி வரலாம்.
குறு வணிகர்களில், அநேகமாக யாருமே வருமான வரி செலுத்த வேண்டி வராது.
சிறு வணிகர்களில் ஆண்டு விற்பனை ரூபாய் 30 லட்சம் வரை உள்ளவர்களுக்கும் வருமான வரிச் சுமை ஏற்படாது. ஆண்டு விற்பனை 60 லட்சம் வரை உள்ள சிறு வணிகர்கள், அதிகபட்சமாக ஓர் ஆண்டுக்கு ரூபாய் 25,000 வரை வருமான வரி செலுத்த வேண்டி வரலாம்.
இதுவும் அன்றி மற்ற வருவாய்ப் பிரிவினருக்கு உள்ள தள்ளுபடிகள், கழிவுகள், விலக்குகள் ஆகியனவும் உண்டு.
குறு, சிறு வணிகர்கள் கணக்குப் புத்தகங்கள் வைத்துக் கொள்வது சட்டப்படி கட்டாயம் அல்ல எனினும், இயன்றவரை எல்லாவற்றுக்கும் கணக்கு எழுதி வைத்துக் கொள்வது நல்லது; ஆரோக்கியம் ஆனது.
வரிப் பயன்பாட்டுக்காக மட்டுமன்றி, நமக்குமே கூட, முறையான கணக்குப் பதிவுகள்தாம், சரியான வழிகாட்டியாக அமைய முடியும்.
வருமான வரிச் சட்டம், பிரிவு 28 தொடங்கி, பல உட்பிரிவுகளுடன், பிரிவு 44 வரை, வணிக வருமானத்தைப் பற்றிப் பேசுகிறது.
வியாபாரத்தில் கிடைக்கும் லாபம் அல்லது ஆதாயம் மட்டும் அல்லாது, பிற வகை வருமானங்களையும் பட்டியல் இடுகிறது பிரிவு 28. இவையும் ‘வணிக வருமானம்தான்’ என்கிறது. அவை யாவை..?
ஏதேனும் ஒரு வகையில் கிடைக்கிற இழப்பீடு (நஷ்ட ஈடு); அரசுத் திட்டங்கள் மூலம் பெறுகிற நிதி உதவி; வணிகத்தில் பங்குதாரராக இருப்பவருக்கு சம்பளம், போனஸ், கமிஷன், தரப்பட்டு இருந்தால், அந்தத் தொகை. அதாவது ஒருவர் பங்குதாரராக இருக்கிறார். அவருக்கு சம்பளம் வழங்கியதாக செலவுக் கணக்கில் காட்டி, வருமானத்தைக் குறைத்துக் கொள்வதை, சட்டம் ஏற்கவில்லை; இத்தொகை, வணிக வருமானமாகவே கூட்டப் படும்.
மற்றபடி கட்டிடத்துக்கான வாடகை, வரிகள், காப்பீடு (insurance) மற்றும் பழுது பார்த்தல் (repairs) செலவுகளை வருமானத்தில் இருந்து கழித்துக் கொள்ளலாம். (பிரிவு 30).
இதேபோல, இயந்திரங்களுக்கான் காப்பீடு மற்றும் பழுது பார்த்த செலவுகள் (பிரிவு 31), கட்டிடங்கள், இயந்திரங்கள் உள்ளிட்டவை மீதான தேய்மானம் (depreciation) (பிரிவு 32) ஆகியவற்றை வருமானத்தில் இருந்து குறைத்துக் கொள்ளலாம்.
முதலீட்டுப் படி (investment allowance) (பிரிவு 32A), வளர்ச்சித் தள்ளுபடி (development rebate) (பிரிவு 33) ஆராய்ச்சி, ஊரக உட்கட்டமைப்பு வளர்ச்சித் திட்டங்களுக்கான செலவுகள் (பிரிவு 35) போன்ற, சில சிறப்புக் கழிவுகளும் வழங்கப் பட்டு இருக்கின்றன. இந்தத் தள்ளுபடி, கழிவுகளின் பொருள் என்ன…?
வியாபாரத்தில், விற்பனை மூலம் கிடைத்த மொத்தப் பணத்தையும் வருமானமாக எடுத்துக் கொள்வது இல்லை. கிடைத்த தொகையில், வணிகத்தின் போது ஏற்பட்ட செலவுகள், இழப்புகளை மதிப்பிட்டு, அதற்கான தொகையை, வருமானத்தில் இருந்து கழித்துக் கொள்ளலாம். இதன் பிறகு எஞ்சி நிற்கிற தொகைதான், வரிக்கு உரிய வருமானமாக (taxable income) கணக்கில் கொள்ளப் பட்டு வரி விதிக்கப்படும்.
விளக்கமாகத் தெரிந்து கொள்ள வேண்டிய ஏராளமான அம்சங்கள் கொண்ட நுணுக்கமான பகுதி இது.
ஒரு சிறிய அறிமுகம் என்கிற வகையில் இத்தோடு நிறுத்திக் கொள்வோம். கூடுதல் தகவல்கள் வேண்டுவோர், ‘ஆடிட்டர்’ (Chartered Accountant) ஒருவரைத் தொடர்பு கொள்ளுதல் நலம்.
இனி, மாத ஊதியம் பெறுவோர் மற்றும் வெளி நாட்டில் வேலை பார்க்கும் நடுத்தர வகுப்பினர் பலருக்கும் மிகவும் தேவையான ஒரு பகுதிக்குள் நுழைவோமா…?
– தொடரும்.