சென்னை.
தமிழ்நாட்டில் தற்போது நடைபெற்று வரும் எடப்பாடி பழனிச்சாமி அரசு விரைவில் கவிழும் என்று அதிமுக ஓபிஎஸ் அணியின் மூத்த உறுப்பினர் மைத்ரேயன் கூறினார்.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய மைத்ரேயன் எம்.பி இந்த தகவலை வெளியிட்டார்.
அவர் இன்று காலை செய்தியாளர்களிடம் கூறியதாவது,
தமிழகத்தில் சட்டமும் இல்லை. ஒழுங்கும் இல்லை. இரண்டுமே தேடக்கூடிய நிலையில் தான் உள்ளது. தமிழகத்தில் ஆட்சி என ஒன்று உள்ளதா என்ற நிலை நிலவுகிறது.
தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகள் வெளிமாநிலத்திற்கு செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் அமைச்சர்களுக்கு ஆதரவானவர்கள் தொடர்ந்து மர்மமான முறையில் மரணமடைந்து வருகின்றனர். இந்த மர்ம மரணம் குறித்து காரணம் தெரியவில்லை.
கோடையில் மக்களை வாட்டி வதைக்கும் குடிநீர் பிரச்னைக்கு எடப்பாடி எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை.
எடப்பாடி அரசின் அமைச்சர்கள் மீது தொடர்ந்து புகார்கள் கூறப்படுகிறன்றன. வழக்குகளை சந்திக்கின்றனர்.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு, சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி அமைச்சர் காமராஜ் மீது வழக்கு, தற்போது சமூகலநலத்துறை அமைச்சர் சரோஜா, பெண் அதிகாரியிடம் ரூ.30 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளார்.
இதையெல்லாம் பார்க்கும்போது, அமைச்சர்கள் அனைவரும் தன்னிச்சையாக செயல்பட்டு வருவதையே காட்டுகிறது என்றார்.
மேலும், ஜெயலலிதா இருந்தபோது ராணுவ கட்டுப்பாட்டுடன் அனைவரும் செயல்பட்டனர். ஆனால், தற்போது அனைவரும் இஷ்டம் போல் செயல்படுகின்றனர் என்றும்,
எடப்பாடி அரசு ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன. தமிழக அரசு அதன் பாரம் தாங்காமல் தானாகவே கவிழும்.. தமிழகத்திற்கு விரைவில் சட்டசபை தேர்தல்வரும் ஒ.பி.எஸ்., விரைவில் முதல்வராவார் என்றார்.
தற்போது முடக்கப்பட்டுள்ள இரட்டை இலை சின்னம் எங்களிடம் வரும் என்றும், ‘கூவத்தூர் பாய்சை’ பற்றி நாங்கள் கவலைப்படவில்லை…. அதிமுக தொண்டர்களை பற்றித்தான் கவலைப் படுகின்றோம்.
இவ்வாறு அவர் கூறினார்.