டில்லி,
இந்த ஆண்டு நாடு முழுவதும் அதிக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
கடந்த ஆண்டு எல்நினோவின் தாக்கம் அதிகம் இருந்தால் மழை வாய்ப்பு குறைந்ததாகவும், ஆனால் தற்போது எல்நினோவின் தாக்கம் குறைவாக இருப்பதால் இந்த ஆண்டு நாடு முழுவதும் அதிக மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.
பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் வெப்ப மாறுதல்களால் ஏற்படும் காற்று மாறுபாடு ‘எல்நினோ’ என அழைக்கப்படுகிறது. இந்த காற்று மாறுபாடு காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை, காட்டுத்தீ, வெள்ளம், பயிர் சேதம் போன்றவவை ஏற்படுகிறது.
கடந்த ஆண்டு எல்நினோவின் தாக்கம் அதிகரித்ததால் 70 சதவீத மழை மட்டுமே பெய்தது. இதன் காரணமாக நெல், கரும்பு, சோளம், பருத்தி உள்ளிட்ட பயிர்கள் பாதிக்கப்பட்டன. பெரும்பாலான பகுதிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டன.
இந்நிலையில், இந்த ஆண்டு எல்நினோவின் தாக்கம் குறையும் அறிகுறிகள் தெரிவதாக ஆஸ்திரேலிய வானிலை நிறுவனம் தெரிவித்துள்ளது
அதன் அடிப்படையில், இந்திய வானிலை ஆய்வு மேற்கொண்டது. அதைத்தொடர்ந்து இந்தியாவில் சராசரியான 89 சென்டிமீட்டர் மழையில் 96 சதவீதம் இந்த ஆண்டு பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.