வெற்றியின் அளவுகோல் வருமானவரி! 7. நற்பணிக்கு வரி இல்லை!
இந்திய வருமான வரிச் சட்டம், மிக நீண்டது; மிகக் கடினமானது; மிகக்கடுமையானதும் கூட. இவை எல்லாமே உண்மைதான்.
298 பிரிவுகள், ஒவ்வொன்றுக்கு உள்ளும் பல உட்பிரிவுகள்; நிபந்தனைகள், விளக்கங்கள், விலக்குகள்….
1000 பக்கங்களுக்கு மேல் நீளும் இச்சட்டம், கடுமையைக் காட்டிலும் மென்மையையே அதிகம் காட்டுகிறது. நம்பமுடியவில்லைதானே…?
எந்த நாட்டிலுமே, எதிர்மறைச் சட்டங்கள் என்று சில இருக்கும்.
உதாரணத்துக்கு, இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம். (Indian Penal Code)
தவறும் அதற்கான தண்டனையும், இச்சட்டத்தின் மையக் கரு. தண்டனையை உறுதி செய்ய வேண்டும்; அதன் மூலம் சமுதாயத்தில் குற்றங்களைத் தடுக்க வேண்டும். இந்த ஒற்றை நோக்கத்துடனே செயல்படுவதால், இதில், நேர்மறையான விஷயங்கள் மிகவும் குறைவு.
வருமான வரிச் சட்டம் அப்படிப்பட்டது அல்ல.
வருமானம் உள்ளவர்களிடம் இருந்து, வரி வசூலிக்க வேண்டும். அந்தத் தொகையை, நல்ல திட்டங்கள் மூலம், சாமான்யர்களுக்குச் சென்று சேர்க்க சேர வேண்டும். ஒரு வகையில் இது, ‘மலைக்கள்ளன்’ வேலைதான்.
வரியாக வசூலித்து மக்களுக்கு சேவையாகத் திருப்பித் தருகிற இந்தப் பணியை வேறு யாரேனும் செய்தால்…?
அரசாங்கம் முழு மனதுடன் வரவேற்கிறது. யார் இதைச் செய்வார்கள்…? அறக்கட்டளைகள்! ‘தர்ம ஸ்தாபனங்கள்’ என்று முன்னர் விளிக்கப் பட்டவைதாம், தூய தமிழில் ‘அறக் கட்டளைகள்’ ஆயின.
இலாப நோக்கம் இன்றி மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காகத் தொடங்கப்பட்டு, சேவை மனப்பான்மையுடன் இயங்கி வருபவை இவை.
செல்வம் வைத்து இருப்போர், அதில் ஒரு பங்கை, ‘தர்மத்துக்காக’ எழுதி வைத்து விடுவார்கள். அதைக் கொண்டு, பள்ளிக் கூடம், மருத்துவ மனை, ஆலயம், அன்னதானக் கூடம் ஆகியன நிறுவி, இலவசமாக மக்களுக்கு வழங்குகிற பணியை, நம் முன்னோர்கள் கடமையாகவே செய்து வந்தார்கள்.
இதனை மனதில் நிறுத்தியே மகாகவி பாரதியார், “அன்னசத்திரம் ஆயிரம் கட்டல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், …………, அன்ன யாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்” என்றார்.
‘வேறு தர்ம காரியங்களைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்; முதலில் கல்விக்கு நிதி தாருங்கள்’ என்கிற வேண்டு கோள்தான் இது. இதனை ஏற்று, ஏராளமானோர் கல்வி நிறுவனங்களை ஏற்படுத்தி, எழுத்தறிவு உருவாகக் காரணமாக இருந்து இருக்கிறார்கள்.
இவ்வாறு ‘அறப் பணிகளுக்காக’ நிறுவுகிற அமைப்புகளுக்குக் கிடைக்கும் வருமானத்துக்கு, வரியில் இருந்து முற்றிலுமாக விலக்கு தருகிறது சட்டம். ஆனால், விலக்கு பெற சில நிபந்தனைகளை விதிக்கிறது.
வருமான வரிச் சட்டம் பிரிவு 11, 12 மற்றும் 13 ஆகியன அறக்கட்டளை வருமானம் பற்றியது. வரி விலக்கு பெறுகிற அறக் கட்டளை, பிரிவு 12Aஇன் கீழ், வருமான வரித் துறைக்கு, விண்ணப்ப்பிக்க வேண்டும். பொதுவாக, சில ஆதாரங்கள்/ விவரங்களை இந்த விண்ணப்பத்துடன், இணைக்க வேண்டி இருக்கும். அவை: அறக்கட்டளையின் நோக்கங்கள், செயல் திட்டங்கள், அறங்காவலர்கள் பற்றிய குறிப்புகள், அறக்கட்டளையை மாநிலப் பத்திரப் பதிவுத் துறையில் பதிவு செய்ததற்கான சான்று நகல் ஆகியன.
வருமான வரி ஆணையர் பொறுப்புக்கு இணையான அலுவலர், விண்ணப்பத்தைப் பரிசீலித்து, விண்ணப்பித்த 6 மாதங்களுக்குள் அறக்கட்டளையை, வருமான வரிச் சட்டம் பிரிவு 12AAஇன் கீழ் பதிவு செய்து ஆணை வழங்குவார்.
பதிவு செய்வதில் ஆணையருக்கு மேலும் தகவல்கள் தேவைப் படுமாயின், அவற்றைக் கோரலாம்; அல்லது விண்ணப்பதாரரை நேரில் வரச் சொல்லியும் விசாரிக்கலாம்.
12AA பதிவு நிரந்தரமானது. ஒரு முறை பெற்றால் போதுமானது. ஆண்டுதோறும் புதிப்பிக்க வேண்டியது இல்லை. இவ்வாறு பதிவு செய்யப் பட்ட அறக்களையின் வருமானம், வரிச் சட்டம் பிரிவு 11இன் கீழ், முற்றிலுமாக வரியில் இருந்து விலக்கு பெறும்.
இது நியாயம்தானா..? அறக்கட்டளை என்கிற பெயரில் தனிப்பட்ட முறையில் யாரும் பொய் சொல்லி வருமான வரியில் இருந்து விலக்கு பெற்று விட்டால்..? இதற்காகவே சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கின்றன.
அறக்கட்டளையின் வருமானத்தை, அதன் நோக்கங்களுக்கு அன்றி வேறு எதற்கும் பயன்படுத்த முடியாது. அதன் சொத்துகளையும் அறக் கட்டளைக்கு அன்றி, நிறுவனர் உட்பட, எந்தத் தனி நபருக்கும் மாற்ற முடியாது. அறக்கட்டளையில் வருமானம் வரும் எந்தப் பதவியையும் ‘ட்ரஸ்டிக்கள்’ வகிக்க முடியாது.
முக்கியமாக, ஒவ்வோர் ஆண்டும், மொத்த வருமானத்தில் குறைந்தது 85% தொகையை, அதே ஆண்டில், அறக்கட்டளையின் நோக்கங்களுக்காக செலவிடல் வேண்டும். முறைப்படி வருமானவரி ஆணையரின் அனுமதி இன்றி, அறக்கட்டளையின் சொத்துகளை யாருக்கும் விற்கவோ மாற்றவோ முடியாது.
என்ன தெரிகிறது…? வரியாக செலுத்தவில்லை என்றாலும், அறக்கட்டளையின் வருமானம், சொத்துகள், மறைமுகமாக அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. ஆகவேதான் வரியில் இருந்து விலக்கு அளிக்கப் படுகிறது.
ஒரு கேள்வி எழுகிறது. இன்று நாட்டில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்கள், மருத்துவ மனைகளில் பெரும்பாலா னவை, அறக்கட்டளை மூலம்தானே செயல் படுகின்றன…? இவற்றின் லாபத்தில் பங்கு இல்லை எனில், இந்த நிறுவனங்களின் உரிமையாளர்கள் ஏன், அதிகக் கட்டணம் வசூலிக்க வேண்டும்…?
விடை மிக எளிது. சட்டத்தின் விலக்குகளைத் தமக்கு சாதகம் ஆக்கிக் கொண்டு, மறைமுகமாக சம்பாதிக்கின்றனர். மக்கள் பணத்தைக் கொள்ளை அடிக்கின்றனர். இதனைத் தடுக்கும் விதமாகத்தான், மத்திய அரசு சமீப காலமாக, அறக்கட்டளைகளின் மீது தனது முழு கவனத்தையும் திருப்பி இருக்கிறது.
மக்களுக்கு நன்மை செய்பவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக வரி விலக்கு அளிப்பது மிகச் சிறந்த மனிதாபிமான நடவடிக்கை. அதையும் சிலர், தம்முடைய சுயநலத்துக்குப் பயன்படுத்தினால், அரசுதான் என்ன செய்யும்..?
‘……. பார்த்துத் திருந்தா விட்டால், …….. ஒழிக்க முடியாது’தானே..?
அறக்கட்டளைக்கான வரி விலக்கு சில வகை வருமானங்களுக்குப் பொருந்தாமலும் போகலாம். இவற்றைப் பட்டியலிடுகிறது பிரிவு 13. விரிவாகப் பார்க்க வேண்டியது இல்லை. இந்த அளவுக்கு அறக்கட்டளை பற்றித் தெரிந்து கொண்டால் போதுமானது.
இனி, ‘வியாபாரம்’ பார்க்கலாமா…?
வணிகம் மூலம் வருமானம் பெறுபவர்களுக்கு, குறிப்பாக சிறு வணிகர்களுக்கு,
என்னென்ன விலக்குகள், கழிவுகள், சலுகைகள் உண்டு…?
( தொடர்வோம்….)