சென்னை,
அ.தி.மு.க. இரு அணிகளும் இணையக்கூடாது என்று செம்மலை சொல்லும் கருத்து குறித்து ஓபிஎஸ் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இரு அணிகளும் இணையும் என்று அதிமுக தொண்டர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் இரு அணியை சேர்ந்தவர்களும் பல்வேறு கருத்துக்களை கூறி வருவதான் காரணமாக இணைப்புக்கான பேச்சுவார்த்தை இதுவரை தொடங்காமல் இழுபறியில் நீடித்து வருகிறது.
இதற்கிடையில், அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணியின் ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற செம்மலை எம்.எல்.ஏ. “ஓ.பி.எஸ்.அணி, அ.தி.மு.க. (அம்மா) அணியுடன் இணையக் கூடாது என்று நிர்வாகிகள் கருத்து தெரிவிப்பதாகவும், இதை தலைமையிடத்தில் தெரிவிப்பேன் என்றும் கூறி இருந்தார்.
இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
அ.தி.மு.க. இரு அணிகளும் இணையக்கூடாது என்று செம்மலை சொல்லும் கருத்து அவரது தனிப்பட்ட கருத்தா? இல்லையா? என்பதை ஓ.பன்னீர்செல்வம்தான் விளக்க வேண்டும் என்றார்.
எங்களைப் பொறுத்தவரை இரு அணிகளும் இணைய பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயாராகவே இருக்கிறோம். காலம் கனிந்த பிறகும் ஓ.பி.எஸ். தரப்பினர் பேச்சுவார்த்தைக்கு வர மறுக்கிறார்கள்.
புரட்சித்தலைவி அம்மா ஆசியால் அ.தி.மு.க. ஆட்சி 4 ஆண்டு மட்டுமல்ல, அதற்கு மேலும் தொடரும். மக்கள் இந்த ஆட்சியைத்தான் விரும்புகிறார்கள்.
அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள சிறு சலசலப்பை வைத்து சைக்கிள் கேப்பில் ஆட்சியை பிடிக்கலாம் என்று மு.க.ஸ்டாலின் நினைக்கிறார். அவரது எண்ணம் ஈடேறாது.
இவ்வாறு அவர் கூறினார்.