கொல்கத்தா,

மேற்குவங்காளத்தில் சட்டக்கல்லூரி மாணவர்கள் தங்களது விடைதாள்களில் பாடல் வரிகளும், லவ் லெட்டர்களும் எழுதியிருந்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் இதை கல்லூரி நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். அதன் காரணமாக, விடைதாளில் தேவையற்றவைகளை எழுதிய மாணவர்களை இரண்டு ஆண்டுகள் சஸ்பெண்டு செய்தது பல்கலைக்கழகம்.

மேற்கு வங்காள மாநிலம் மால்டாவில் உள்ள பாலூர்காட் சட்டக் கல்லூரியில் 4வது செமஸ்டர் தேர்வு நடைபெற்றது. அதை எழுதிய மாணவர்கள்  கேள்விகளுக்கு பதிலாக தங்களுடைய சொந்த வாழ்க்கை கதையை எழுதியுள்ளனர்.

ஒருசில மாணவர்கள்  காதல் கடிதங்களையும், காதல் டயலக்குகளையும்  எழுதி வைத்து உள்ளனர். மேலும் சிலர் பிரபலமான இந்தி மற்றும் பெங்காலி பட பாடல் வரிகளையும் எழுதி உள்ளனர்.

4வது செமஸ்டர் தேர்வை எழுதிய மாணவர்களில் சிலர் மட்டுமே இந்த அநாகரிக செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.  மாணவர்களின்  பேப்பர்கள் திருத்தம் செய்யப்பட்டபோது, இதை கண்ட ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்து கல்லூரி நிர்வாகத்தில் புகார் கொடுத்தனர்.

சட்டம் தொடர்பான தேர்வுகளில் பொறுப்பு இல்லாமல் செயல்பட்ட மாணவர்கள் மீது நிர்வாகம் நடவடிக்கை எடுத்து உள்ளது. இது குறித்து பல்கலைக்கழகம் கமிட்டி அமைத்து விசாரணை நடத்தினர். அதில் அவர்களின் குற்றம் உறுதியானதால் அவர்கள் 10 பேரையும் (7 மாணவர்கள், 3 மாணவிகள்)  2 வருடங்களுக்கு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது.

இதுகுறித்து பல்கலைக்கழக துணை வேந்தர் பேசுகையில், “நாங்கள் அவர்களுக்கு இரண்டாவது வாய்ப்பு கொடுத்துள்ளோம்,  அவர்களுடைய பதிவு எண்ணை ரத்து செய்யவில்லை.

சஸ்பெண்டு செய்யப்பட்ட மாணவர்கள்  இரண்டு வருடங்கள் கழித்து இதே பிரிவில் மீண்டும் சேர்ந்து கொள்ளலாம்.  இவர்களை இப்படியே விட்டால் மற்ற மாணவர்களும் இதுபோன்றுதான் செயல்படுவார்கள்,” என கூறி உள்ளார்.