சென்னை,

விவசாயிகள் பிரச்சினையில் தமிழக அரசு உச்சநீதி மன்றத்தை ஏமாற்றுகிறது. அடுத்தக்கட்டமாக தலைமை செலயகத்தில் உண்ணாவிரதம் இருப்போம் என்று அதிரடி கருத்தை கூறியுள்ளார் விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு.

தமிழகத்தில்  வறட்சி காரணமாக  400க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டும், மாரடைப்பு ஏற்பட்டும் உயிரிழந்துள்ளனர். எனவே,  தமிழக விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரண உதவி வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், நதிநீர் இணைக்க வேண்டும், விவசாயிகளுக்கு பென்சன்  என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 45 நாட்களுக்கும் மேலாக தமிழக விவசாயிகள் அரை நிர்வாண போராட்டம் நடத்தி வந்தனர்.

தொடர்ந்து தமிழக முதல்வர் கொடுத்த உறுதிமொழியை ஏற்று போராட்டத்தை ஒத்திவைத்து விட்டு தமிழகம் திரும்பினர்.

கடந்த 25ந்தேதி நடைபெற்ற தமிழக முழு அடைப்பு போராட்டத்திலும் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், விவசாயிகள் பிரச்சினை குறித்த வழக்கில் தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்த உச்சநீதி மன்ற நீதிபதிகள் விவசாயிகள் மரணம் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில் வழக்கின் விசாரணை இன்று உச்சநீதி மன்றத்தில் நடைபெற்றது. அப்போது தமிழக அரசு சார்பில் விவசாயிகள் தற்கொலை குறித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

அதில், தமிழகத்தில் வறட்சி காணமாக விவசாயிகள் யாரும் தற்கொலை செய்யவில்லை என்று கூறியிருந்தது.

இது தமிழக விவசாயிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அய்யாக்கண்ணு,

தமிழக அரசு இன்று உச்சநீதிமன்றத்தில் ஒரு தவறான அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில் வறட்சி காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்யவில்லை என்று கூறி இருக்கிறார்கள். இதன் மூலம் உச்ச நீதிமன்றத்தையே இந்த அரசு ஏமாற்ற பார்க்கிறது என்று அதிரடி குற்றம் சாட்டினார்.

மேலும், விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக தி.மு.க உள்ளிட்ட அனைத்துகட்சியினர் நடத்திய முழுஅடைப்பு போராட்டத்திற்காக நன்றி கூறினார்.

மேலும்,  தமிழகத்தில் வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டுள்ளது. நெல் சாகுபடி செய்ய முடியவில்லை. 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இறந்ததாக போலீசில் எப்.ஐ.ஆர். உள்ளது என்று குறிப்பிட்டார்.

இதுகுறித்து நாங்கள் முதல்வரை  அடுத்த வாரம் கண்டிப்பாக சந்திப்போம்.  அப்போது அரசின் பிரம்மான பத்திரம் குறித்து அவரிடம் கேட்போம் என்றார்.

எங்களுக்கு நீதி கிடைக்காவிட்டால் தலைமை செயலகத்திலிலேயே உண்ணாவிரதம் இருப்போம், மறியலில் ஈடுபடுவோம் என்றும் கூறினார்.

மேலும்,  டில்லியில் முதல்வர் எடப்பாடி  எங்களை சந்தித்தபோது அவரது பேச்சை நம்பினோம்.  அப்போது, அவர் எங்களுக்கு  கடன் தள்ளுபடி வாங்கித்தருவதாக கூறினார்.

ஆனால் இப்போது அதற்கு நேர் மாறாக உச்ச நீதிமன்றத்தில் தவறான அறிக்கையை அரசு தாக்கல் செய்துள்ளது.

மாறுபட்ட கருத்துக்களை அரசு தெரிவித்து வருவதால் அதை எதிர்த்து போராடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.