BJP MLA Kesar Singh assaults bank manager, drags him out of branch
உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலியில், வங்கிக்குள் புகுந்து, கிளை மேலாளரை பிடித்து இழுத்து காரில் ஏற்றிச் சென்று பாஜக எம்எல்ஏ ஒருவர் அடித்து உதைத்து மிரட்டலும் விடுத்துள்ளார்.
ரேபரேலியில் உள்ள பரோடா வங்கிக் கிளைக்குள் பிற்பகம் 3 மணி அளவில், தமது ஆதரவாளர்களுடன் புகுந்த பாஜக எம்எல்ஏ கேசார் சிங் கேங்க் வா, அங்கிருந்த கிளை மேலாளர் கேபினுக்கு சென்றார். அங்கு அமர்ந்திருந்த மேலாளர் ஹரிஷ் குமார் ஹியாங்கியைப் பலவந்தமாக பிடித்து இழுத்துச் சென்று வெளியில் நிறுத்தப்பட்டிருந்த காரில் ஏற்றிச் சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த வங்கி ஊழியர்கள் அனைவரும் இந்தச் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, வேலையைப் புறக்கணித்து வங்கியை விட்டு வெளியில் வந்து நின்றனர். தகவலறிந்த உயர் அதிகாரிகள் அந்தக் கிளைக்கு விரைந்து வந்து நடந்த சம்பவங்கள் குறித்து விசாரித்தனர். இதனிடையே, நீண்ட தூரம் கிளை மேலாளரை காரில் அழைத்துச் சென்ற எம்எல்ஏ கும்பல், அடையாளம் தெரியாத இடத்தில் அவரை இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர். தாமதமாக வங்கிக் கிளைக்கு வந்து சேர்ந்த மேலாளர் ஹரிஷ்குமார் ஹியாங்கியின் சட்டை கிழிக்கப்பட்டும், தலை மற்றும் கைகளில் தாக்கப்பட்ட காயமும் காணப்பட்டுள்ளது. இதையடுத்து, வங்கி உயரதிகாரிகள் மேலாளர் ஹரிஷ்குமாருடன் சென்று காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர். அவர், இந்தப் புகார் குறித்து எப்ஐஆர் பதிவு செய்வதுடன், சட்டப் பேரவைத் தலைவருக்கும் அனுப்பி வைப்பதாக உறுதி அளித்துள்ளார்.
ரேபரேலியில் நடைபெற்ற இந்த சம்பவரம் வங்கி ஊழியர்கள், அதிகாரிகளை பெரும் அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் பாஜக எம்எல்ஏக்கள் அராஜகத்தில் ஈடுபடுவது வாடிக்கை நிகழ்வாகி வருகிறது. 10 நாட்களுக்கு முன்னர், பாஜக எம்எல்ஏவான மகேந்திர யாதவ், சுங்கச்சாவடி ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் அரங்கேறியது.