டில்லி,
இரட்டைஇலைக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற புகாரில் தற்போது பணம் பரிவர்த்தனை காரணமாக ஹவாலா புரோக்கர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன் காரணமாக டிடிவி தினகரன் மீதான புகார் மேலும் வலுவடைந்துள்ளது. இதையடுத்து செய்வதறியாது தினகரன் விழி பிதுங்கி வருவதாக கூறப்படுகிறது.
இரட்டை இலையை தங்களது அணிக்கு ஒதுக்க கோரி டிடிவி தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்பட்ட புகார் காரணமாக, டில்லி குற்றப்பிரிவு போலீசாரின் 4 நாட்கள் விசாரணைக்கு பிறகு தினகரன் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், லஞ்ச பணம் பரிமாற்றம் தொடர்பாக பிரபல ஹவாலா புரோக்கர் நரேஷ் இன்று டில்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தரகர் சுகேஷ் சந்திரா முதலில் கைது செய்யப்பட்டார். அவரின் வாக்குமூலத்தை தொடர்ந்து டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டு போலீஸ் பிடியில் உள்ளார்.
அவரிடம் நடைபெற்ற விசாரணையில்ர, இரட்டை இலையை அதிமுக அம்மா அணிக்கு ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு தினகரன் ரூ.60 கோடி பேரம் பேசியதாக தெரியவந்தது. கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திராவிடம் இருந்து ரூ.1.30 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து நடைபெற்ற விசாரணையையடுத்து, இதில் முதல் கட்டமாக ரூ.10 கோடி பண பரிமாற்றம் நடைபெற்றது தெரிய வந்துள்ளது. அந்த 10 கோடி ரூபாய் பணத்தை சென்னை யிலிருந்து கொச்சி வழியாக டில்லிக்கு ஹவாலா தரகர் மூலம் அனுப்பியதாக கூறப்படுகிறது.
இதில் தரகராக செயல்பட்டவர் நரேஷ் என தெரிய வந்தது. இவரை போலீசார் தேடி வந்த நிலையில், அவர் இன்று தாய்லாந்தில் இருந்து டில்லி வருவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து உஷாரா டில்லி போலீசார், டில்லி விமான நிலையத்தில் வைத்து நரேஷை கைது செய்தனர்.
தற்போது அவர் ரகசிய இடத்துக்கு அழைத்து செல்லப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. நரேஷ் கைது செய்யப்பட்டதன் காரணமாக டிடிவி தினகரன் மீதான வழக்கு மேலும் இறுக ஆரம்பித்துள்ளது.