சென்னை,
சென்னையில் நடைபெற்ற தமிழக மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் அகில இந்திய பொதுச்செயலாளர் நடிகை நக்மா கலந்துகொண்டார்.
அப்போது, தமிழகத்தில் பாரதியஜனதா கட்சி காலூன்ற குறுக்கு வழிகளை கையாழுகிறது என்று குற்றம் சாட்டினார்.
காங்கிரஸ் தலைமையமான சத்தியமூர்த்தி பவனில் தமிழக மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
காங்கிரஸ் மாநில மகளிர் அணி தலைவர் ஜான்சி ராணி தலைமை தாங்கினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் அகில இந்திய செயலாளர் ஹசீனா சையத் மற்றும். இந்திய பொது செயலாளர் நக்மா ஆகியோர் கலந்து கொண்டார்.
ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு நக்மா செய்தியாளர்களிடம் கூறியதாவது,
மதுக்கடைகளை எதிர்த்து தமிழகம் முழுவதும் பெண்கள் போராடி வருகின்றனர். தமிழகத்தில் குடியிருப்பு பகுதிகளில் மதுக்கடைகள் திறப்பதை அரசு தவிர்க்க வேண்டும். கோர்ட்டு உத்தரவை தமிழக அரசு மதித்து நடக்க வேண்டும். குறுக்கு வழிகளை கையாண்டு மதுக்கடைகளை திறக்க முயற்சிக்க கூடாது.
பெண்களை இழிவாக பேசிய கேரள அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். அவரை பதவி விலக கோரி கேரளா முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது.
தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நியாயமான கோரிக்கைகளுக்காக போராடு கிறார்கள். அவர்களின் கோரிக்கைகளை காது கொடுத்து கேட்க கூட பா.ஜனதா அரசு தயாராக இல்லை.
விவசாயிகள் பிரச்சினையில் மத்திய அரசின் பொறுப்பை மாநில அரசு மீது தள்ளிவிட கூடாது. அவர்களது நியாயமான கோரிக்கைகளை மத்திய மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும்.
தேர்தல் கமிஷனிடம் பேரம் பேசியது தொடர்பாக டி.டி.வி.தினகரன் உள்பட சிலர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இதில் தவறு செய்த அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.
தமிழ்நாட்டில் ஒரு சதவீதம் கூட பா.ஜனதாவுக்கு செல்வாக்கு கிடையாது. ஆனால் எப்படியாவது தமிழ்நாட்டில் காலூன்ற பார்க்கிறது. அதற்காக அ.தி.மு.க.வை பிளவுபடுத்தி குறுக்கு வழிகளை கையாள்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் பா.ஜனதா காலூன்ற போவதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.