சென்னை:
நீட் தேர்வில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தாமதமாக விண்ணப்பித்தவர்களும் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று சிபிஎஸ்சி இயக்குனருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த முகுந்தன் உள்பட 38 பேர் சேர்ந்து சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தனர்.
அதில், மருத்துவ படிப்பு நுழைவு தேர்வான ‘நீட்’ தேர்வு தமிழக மாணவர்களுக்கு உண்டா? இல்லையா? என்று தெரியவில்லை.
அதேநேரம், இந்த தேர்வில் பங்கேற்க கடைசி நாளில் நாங்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்தோம்.
ஆனால், எங்கள் பகுதியில் உள்ள இணையதளம் தொழில்நுட்ப கோளாறினால், எங்களது விண்ணப்பம் காலதாமதமாக சென்றுள்ளது.
இதனால், எங்களது விண்ணப்பத்தை, நீட் தேர்வினை நடத்தும் சி.பி.எஸ்.சி. இயக்குனர் அலுவலகத்துக்கு சென்றதா? என்று தெரியவில்லை.
அங்கிருந்து எந்த தகவலும் இதுவரை வரவில்லை. தொழில்நுட்ப கோளாறு காரணமாகத் தான் எங்களது விண்ணப்பம் காலதாமதமாக சென்றுள்ளது.
எனவே, எங்களது விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்டு, நடைபெற உள்ள ‘நீட்’ தேர்வில் எங்களை பங்கேற்ற அனுமதிக்க வேண்டும் என்று சி.பி.எஸ்.சி. இயக்குனருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதி, ‘38 மாணவர்கள் செய்த விண்ணப்பம் ஆன்லைன் தொழில்நுட்ப காரணத்தினால், குறித்த நேரத்துக்குள் சென்றடைய வில்லை என்று தெரிய வந்துள்ளது.
எனவே, இவர்களது விண்ணப்பத்தை ஏற்று, நீட் தேர்வினை எழுத அவர்களுக்கு அனுமதி வழங்கவேண்டும்.
அவ்வாறு அனுமதி வழங்கவில்லை என்றால், சி.பி.எஸ்.சி. இயக்குனர் நேரில் ஆஜராக வேண்டியது வரும்’ என்று உத்தரவிட்டார்.