Hospitals can’t hold patients hostage for unpaid bills: Delhi High Court
சிகிச்சைக்கான பணத்தை செலுத்த முடியாத நோயாளிகளை, டிஸ்சார்ஜ் செய்ய மறுத்து பணயக்கைதிகளைப் போல் மருத்துவமனைகள் நடத்தக் கூடாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மத்தியப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவலர் ஒருவரை, மத்திய டெல்லியில் உள்ள கங்காராம்  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவரது மகன் சேர்த்துள்ளார்.

வயிறு சம்மந்தப்பட்ட கடுமையான நோயினால் பாதிக்கப்பட்ட அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், ரூ3.3 லட்சம் மருத்துவமனைக்கு செலுத்திய அவரது மகன், மீதத் தொகையைக் கட்ட வசதி இல்லாததால், தந்தையை அழைத்துச் செல்வதாக கூறியுள்ளார். ஆனால், ரூ 13.45 லட்சம் பில் பாக்கி இருப்பதால் நோயாளியை டிஸ்சார்ஜ் செய்ய முடியாது எனக் கூறி மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது.

இதனால், நோயாளியான ஓய்வு பெற்ற காவலரின் மகன், டெல்லி உயர்நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார். நீதிபதிகள் விபின் சங்கி, தீபா சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுவை விசாரித்தது.

அப்போது, நோயாளிக்கு அறுவைச் சிகிச்சை உட்பட அனைத்துச் சிகிச்சைகளும் அளிக்கப்பட்டிருப்பதாகவும், அதற்காக ரூ. 16.75 மருத்துவமனைக்கு செலுத்த வேண்டி இருப்பதாகவும் மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டது. நோயாளியின் மகன் ரூ3.3 லட்சம் மட்டுமே செலுத்தி இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இதனால், நோயாளியை சிறப்பு சிகிச்சைப் பிரிவில் இருந்து பொதுப்பிரிவுக்கு மாற்றப்பட்டதாகவும் மருத்துவமனை விளக்கமளித்தது.

ஆனால், காவல்துறையில் புகார் அளித்த பின்னரே தமது தந்தைக்கு மருத்துவமனையினர் அறுவைச் சிகிச்சை செய்ததாக நோயாளியின் மகன் தரப்பில் நீதிபதிகளிடம் முறையிடப்பட்டது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞரும், பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள் நோயாளிகளை இதேபோலத்தான் நடத்துகிறார்கள் என்று கூறியுள்ளார்.

இருதரப்பு விவரங்களையும் கேட்ட நீதிபதிகள், சிகிச்சைக்கான பாக்கி பணத்தைச் செலுத்தவில்லை என்பதற்காக நோயாளியை பணயக் கைதியைப் போல் மருத்துவமனைகள் நடத்துவதை அனுமதிக்க முடியாது என கண்டிப்புடன் தெரிவித்துள்ளனர். எனவே மருத்துவ மனையில் இருந்து நோயாளியை உடனடியாக டிஸ்சார்ஜ் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.தனியார் மருத்துவமனைகளின் இத்தகைய நடைமுறைகளை அனுமதிக்க முடியாது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

நாட்டில் பொதுமக்களிடம் அத்துமீறி நடந்து கொள்ளும் தனியார் மருத்துவமனைகளுக்கு, டெல்லி உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு கடும் எச்சரிக்கையாக அமைந்துள்ளது.