சென்னை:

இரட்டை இலைக்காக தன்னிடம் உள்ள நிதித்துறை, திட்ட செயலாக்கம் உள்ளிட்ட அனைத்து துறைகளையும் இழக்கவும் தயார் என்று நிதி அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அதிமுகவைச் சேர்ந்த இரு அணிகளின் பேச்சுவார்த்தை நாளை அல்லது மறுநாள் தொடங்கும் என்று தகவல்கள் வெளியானது.

பேச்சுவார்த்தை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் இருதரப்பில் இருந்தும் வெளியிடப்படவில்லை. ஆனாலும், நாளை காலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெறலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிமுக இரு அணிகளை பேச்சுவார்த்தை நடத்தி இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை சேத்துப்பட்டு ஏரியை நிதி அமைச்சர் ஜெயக்குமார் இன்று ஆய்வு செய்தார். ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், ‘‘அதிமுக எம்எல்ஏ ஒற்றுமையாக உள்ளனர். ஆட்சி தொடரவே எம்எல்ஏக்கள் விரும்புகின்றனர். நாளை ஓ.பி.எஸ் அணியிருடன் பேச்சு நடத்த வாய்ப்புள்ளது. வந்தால் பேச்சுவார்த்தை நடத்துவோம். வருவார்கள் என்று எதிர்ப்பார்த்துள்ளோம்’’என்றார்.

அவர் மேலும் கூறுகையில், ‘‘கட்சியின் நலன் கருதியும், ஆட்சியை காப்பாற்றவும், இரட்டை இலைக்காக தன்னிடம் உள்ள நிதித்துறை, திட்ட செயலாக்கம் உள்ளிட்ட அனைத்து துறைகளையும் இழக்கவும் தயாராக உள்ளேன்’’ என்று ஜெயக்குமார் கூறினார்.