MS Dhoni magic helps Rising Pune Supergiant beat Sunrisers Hyderabad in last-ball thriller

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடனான ஐபிஎல் 10வது சீசன் ஆட்டத்தில், ரைசிங் புனே சூப்பர்ஜயன்ட் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அபாரமாக விளையாடிய டோனி கடைசி பந்தில் பவுண்டரி விளாசி அசத்தினார்.

 

புனே, மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில், டாசில் வென்ற புனே அணி கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் முதலில் பந்துவீச முடிவு செய்தார். அந்த அணியில் சென்னையை சேர்ந்த 17 வயது இளம் வீரர் வாஷிங்டன் சுந்தர் அறிமுகமானார். இவர் விளையாடும் முதல் டி20 போட்டியாகவும் இது அமைந்தது. ஐதரபாத் அணியில், உடல்நிலை சரியில்லாததால் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் இடம் பெறவில்லை. அவருக்கு பதிலாக பிபுல் ஷர்மா சேர்க்கப்பட்டார். சன்ரைசர்ஸ் தொடக்க வீரர்களாக கேப்டன் டேவிட் வார்னர், ஷிகர் தவான் களமிறங்கினர். நிதானமாக விளையாடிய இருவரும் முதல் விக்கெட்டுக்கு 8 ஓவரில் 55 ரன் சேர்த்தனர். அறிமுக சுழல் வாஷிங்டன் சுந்தர் துல்லியமாகப் பந்துவீசி பாராட்டுகளை அள்ளினார்.

தவான் 30 ரன் (29 பந்து, 5 பவுண்டரி) எடுத்து தாஹிர் சுழலில் திரிபாதி வசம் பிடிபட்டார். அடுத்து வார்னருடன் கேன் வில்லியம்சன் இணைந்தார். வில்லியம்சன் 21 ரன் எடுத்து வெளியேற (14 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்), வார்னர் – ஹென்ரிக்ஸ் ஜோடி 3வது விக்கெட்டுக்கு 45 ரன் சேர்த்தது. இயல்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தடுமாறிய வார்னர் 43 ரன் எடுத்து (40 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) உனத்காட் வேகத்தில் ஸ்டம்புகள் சிதற பெவிலியன் திரும்பினார். கடைசி கட்டத்தில் ஹென்ரிக்ஸ் – தீபக் ஹூடா அதிரடியில் இறங்க, சன்ரைசர்ஸ் ஸ்கோர் கணிசமாக உயர்ந்தது. ஹெந்ரிக்ஸ் 26 பந்தில் அரை சதம் அடித்தார். 20 ஓவர் முடிவில் சன்ரைசர்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 176 அன் குவித்தது. ஹென்ரிக்ஸ் 55 ரன் (28 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்), ஹூடா 19 ரன்னுடன் (10 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். புனே பந்துவீச்சில் உனத்காட், கிறிஸ்டியன், தாஹிர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 177 ரன் எடுத்தால் வெற்றி என்ற சற்றே கடினமான இலக்குடன் சூப்பர்ஜயன்ட் களமிறங்கியது. அஜிங்க்யா ரகானே, ராகுல் திரிபாதி இருவரும் துரத்தலை தொடங்கினர். ரகானே 2 ரன் மட்டுமே எடுத்து பிபுல் ஷர்மா பந்துவீச்சில் சித்தார்த் வசம் பிடிபட, புனே அணிக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது. திரிபாதி – கேப்டன் ஸ்மித் ஜோடி 2வது விக்கெட்டுக்கு அதிரடியாக விளையாடி 46 பந்தில் 72 ரன் சேர்த்தது.

திரிபாதி 32 பந்தில் அரை சதம் அடித்தார். ஸ்மித் 27 ரன் (21 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்து ரஷித் கான் சுழலில் கிளீன் போல்டாக, திரிபாதி 59 ரன் (41 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட்டானார். அடுத்தடுத்து 2 விக்கெட் சரிந்ததால், ஐதராபாத் அணி வீரர்கள் உற்சாகத்துடன் தாக்குதலை தீவிரப்படுத்தினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ் 10 ரன் எடுத்து பெவிலியன் திரும்ப, புனே அணி 16.1 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 121 ரன் எடுத்து திணறியது. 23 பந்தில் 56 ரன் தேவை என்ற இக்கட்டான நிலையில், டோனி – மனோஜ் திவாரி ஜோடி நம்பிக்கையுடன் விளையாடி ரன் சேர்த்தது. சமீபத்திய போட்டிகளில் கடும் விமர்சனத்துக்குள்ளாகி இருந்த டோனி, தனது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தி 29 பந்தில் அரை சதம் அடித்தார். இந்த ஜோடியின் உறுதியான ஆட்டத்தால், வெற்றி யாருக்கு என்பதில் கடும் இழுபறி நிலவியது.
சித்தார்த் கவுல் வீசிய கடைசி ஓவரில் 11 ரன் தேவை என்ற பரபரப்பான நிலையில், முதல் பந்தில் திவாரி கொடுத்த கேட்ச் வாய்ப்பை ரஷித் கான் நழுவவிட்டதுடன் அது பவுண்டரியாகவும் அமைந்தது ஐதராபாத் அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. அடுத்த 4 பந்துகளில் 1,1,1,2 ரன் கிடைக்க, கடைசி பந்தில் புனே அணிக்கு 2 ரன் தேவைப்பட்டது. போட்டி டை ஆகி சூப்பர் ஓவருக்கு செல்லுமா, விக்கெட் வீழ்த்தி ஐதராபாத் வெல்லுமா… இல்லை வெற்றி புனே அணிக்கா? என ரசிகர்கள் இருக்கையில் இருப்புக் கொள்ளாமல் தவிக்க, சித்தார்த் வீசிய பந்தை எக்ஸ்ட்ரா கவர் திசையில் பவுண்டரிக்கு விரட்டிய டோனி த்ரில் வெற்றியை வசப்படுத்தினார்.

சூப்பர்ஜயன்ட் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 179 ரன் எடுத்து வென்றது. டோனி 61 ரன் (34 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்), மனோஜ் திவாரி 17 ரன்னுடன் (8 பந்து, 3 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தனர். டோனி ஆட்ட நாயகன் விருது பெற்றார். புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் பின் தங்கியிருந்த சூப்பர்ஜயன்ட், இந்த வெற்றியால் ஒரேயடியாக 4வது இடத்துக்கு தாவியது.