800 million students will be unemployed by 2030 : UN

 

உலக அளவில் வரும் 2030ஆம் ஆண்டில் 80 கோடி இளைஞர்கள் வேலையின்றித் தவிக்கப்போவதாக ஐநா எச்சரித்துள்ளது.

 

இதுதொடர்பாக ஐநாவின் கல்விக்கான சிறப்புத் தூதர் கார்டன் ப்ரவுன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 26 கோடி குழந்தைகள் பள்ளிக்கு செல்லாதவர்களாகவும், 40 கோடி குழந்தைகள் படிப்பறிவே இல்லாமல் உழைத்து வருவோராகவும் இருப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார். இந்தியாவில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், ஐநாவின் இந்த எச்சரிக்கை  நம்மை மேலும் அதிர்ச்சி கொள்ள வைக்கிறது. 2030 ஆம் ஆண்டில், வேலைவாய்ப்புகளுக்கேற்ற திறன் இல்லாத பட்டதாரிகளாக 80 கோடி இளைஞர்கள் இருப்பார்கள் என கார்டன் ப்ரவுன் வெளியிட்டுள்ள அந்த அறிக்கை எச்சரிக்கிறது. உலகின் சரிபாதிக் குழந்தைகள் போதிய கல்வியறிவில்லாதவையாகவே வரும் 2030ஆம் ஆண்டில் இருப்பார்கள் எனவும் அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில்திறன் (Skilled workers) வாய்ந்த இளைஞர்களே இல்லாத நிலை   ஏற்படவும் வாய்ப்பு உள்ளதாக அந்த அறிக்கை கவலை தெரிவிக்கிறது. போர்ப்பதற்றங்கள் நிலவும் பகுதிகளில் பெண்களும், குழந்தைகளும் கல்வி பெறுவதற்கான வாய்ப்பை இழந்தவர்களாகவே காணப்படுவதாகவும் அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். லட்சக்கணக்கான குழந்தைகள் வீதியோரங்களில் தவித்து வரும் நிலையில், ஐநா மூலம் ஆண்டுக்கு ரூ 1200 கோடி மட்டுமே குழந்தைகள் மேம்பாட்டுக்காக ஒதுக்க முடிவதாகவும் கார்டன் ப்ரவுன் தெரிவித்துள்ளார். இதே நிலை நீடித்தால், உலகில் அனைத்துக் குழந்தைகளும் கல்வி பெற வேண்டும் என்ற ஐநாவின் இலக்கை 2030ல் மட்டுமல்ல, 2050 மற்றும் 2100 வரை கூட எட்ட முடியாது என்றும் ப்ரவுன் தமது அறிக்கையில் கூறியுள்ளார். உலக அளவில் குழந்தைகளின் கல்விக்காகவும், தொழில்திறன் மிக்கவர்களாக அவர்களை உருவாக்கவும் தேவையான வழிவகைகளைக் கண்டறிய வேண்டும் எனவும் கார்டன் ப்ரவுன் தெரிவித்துள்ளார்.