மும்பை, 

மஹாராஷ்ட்ர மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களை தன்பக்கம் இழுக்க பாஜக தீவிரமாக திட்டமிட்டு வலைவீசி வருவதாக புகார் எழுந்துள்ளது. இம்மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதலமைச்சர் நாராயண் ரானே பாஜகவில் இணையப்போவதாக  தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, மஹாராஷ்ட்ர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் இதன் பின்னணியில் செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இவர்களின் திட்டப்படி காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் இரண்டாம் நிலைத் தலைவர்களுடன் முதலமைச்சர் பட்னாவிஸ்  தொலைபேசியில் தொடர்ந்து பேசி வருவதாக சொல்லப்படுகிறது.

காங்கிரஸிலும், தேசியவாத காங்கிரஸிலும் வாரிசு அரசியல் அதிகளவில் தலைதூக்கி இருப்பதால் உத்தரபிரதேசத்தில் முலாயம் கட்சி தோல்வி அடைந்ததைப்போல் காங்கிரஸூக்கும் இங்கே எதிர்காலம் இருக்க வாய்ப்பில்லை என சிலர் நினைப்பதாகவும், அவர்களை தங்கள் பக்கம் இழுக்க பாஜக சாமர்த்தியமாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து 29 எம் எல் ஏக்கள் பாஜகவில் இணைய தயாராக இருப்பதாக  அக்கட்சியின் மூத்த தலைவர் சந்திரகாந்த் பட்டீல்  கடந்தமாதம் 23 ம் தேதி அறிவித்தார்.

அதேநேரம்,  பாஜக தங்களின் முக்கியத் தலைவர்களை வளைத்துப்போட்டு மஹாராஷ்ட்ர மாநிலத்தின் மேற்குப் பகுதி  உள்ளாட்சி மன்றத் தேர்தலில் வெற்றிபெற திட்டமிடுவதாக அந்த இரு கட்சிகளும் புகார் தெரிவித்துள்ளன.

முன்னாள் முதலமைச்சர் ரானே கொங்கன் பகுதியில் பாஜகவின் வெற்றியை உறுதிப்படுத்துவார் எனறு கூறப்படுகிறது. எப்படியோ மஹாராஷ்டிர மாநிலத்தில் பாஜக மட்டுமே ஆட்சி அதிகாரத்தை சுவைக்க பல்வேறு திட்டங்களை போட்டுவருவதாக சொல்கிறார்கள்.