சென்னை,

தென்னை மரத்தில் இருந்து பானம் உற்பத்தி செய்ய  தமிழக அரசு அனுமதி அளித்து உள்ளது.

விவசாயிகள் நலன் கருதியும்,  தென்னை விவசாயிகள் வருமானத்தை பெருக்கும் வகையிலும் தென்னை மரத்திலிருந்து “நீரா”  எனப்படும் பானத்தை உற்பத்தி செய்ய அரசு அனுமதி அளித்து உள்ளது.

தற்போது தமிழ்நாட்டில் வெளிநாட்டு பானங்களுக்கு வணிகர்கள் தடை விதித்து உள்ளனர். இதன் காரணமாக இந்திய பானங்களும், பதனீர், இளநீர், சர்பத் போன்ற பானங்களில் விற்பனை உயர்ந்து வருகிறது.

அதைத்தொடர்ந்து தென்னை விவசாயிகளின் கோரிக்கை குறித்து, நேற்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடனான கலந்தாய்வு கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் சுமார் 8 கோடி தென்னை மரங்கள் 10.74 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. அகில இந்திய அளவில் தேங்காய் உற்பத்தியிலும், உற்பத்தித் திறனிலும் தமிழகம் முன்னணி வகிக்கிறது.

தென்னை விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையான தென்னை மரத்திலிருந்து “நீரா” பானத்தினை இறக்கி, பதப்படுத்தி, விற்பனை செய்ய அனுமதி வழங்குவதற்கான கலந்தாய்வு கூட்டம் தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.

“நீரா” என்பது தென்னை மரங்களில் மலராத தென்னம்பாளையிலிருந்து உற்பத்தி செய்யப்படும் ஒரு பானமாகும். நொதிக்காத வகையில் உற்பத்தி செய்யப்படும் இந்த பானம், ஆல்கஹால் இல்லாத, உடல்நலத்துக்கு பெரிதும் உதவக்கூடிய இயற்கையான ஊட்டச்சத்து பானமாகும்.

“நீரா” பானத்தில், வைட்டமின் ஏ, பி, சி அனைத்தும் ஒருங்கே கிடைப்பதுடன், உடல் வளர்ச்சிக்கு தேவைப்படும் தாது உப்புகளும் நிறைந்து காணப்படுகிறது.

தென்னை வளர்ச்சி வாரியத்தினால் கண்டுபிடிக்கப்பட்ட நொதிப்பு எதிர்ப்புத் திரவத்தை பயன்படுத்துவதால், “நீரா” பானம் நொதிக்காமல் இயற்கைச் சுவை மாறாமல் நீண்டநாள் சேமித்து பயன்படுத்த முடியும்.

ஒரு தென்னை மரத்திலிருந்து தேங்காய் உற்பத்தி மூலம் விவசாயிகளுக்கு ஆண்டிற்கு சுமார் ஆயிரம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கும்.

“நீரா” பான உற்பத்தி செய்வதன் மூலம் ஒரு தென்னை மரத்திலிருந்து ஆண்டு வருமானம் சுமார் ரூ.15 ஆயிரம் வரை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு:-

“நீரா” பான உற்பத்தியினை நெறிமுறைப்படுத்துவதற்காக, தென்னை வளர்ச்சி வாரியம் மற்றும் தமிழக அரசினால் அனுமதிக்கப்பட்ட தென்னை விவசாயிகள் சங்கம், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தென்னை உற்பத்தியாளர் இணையம் மூலம் மட்டுமே நொதிப்பு எதிர்ப்புத் திரவத்தினை பயன்படுத்தி, “நீரா” உற்பத்தியினை அனுமதிப்பதென அரசு முடிவு செய்துள்ளது.

நொதிப்பு எதிர்ப்புத் திரவம் மற்றும் பல்வேறு நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, நொதிக்காத முறையில் “நீரா” பானத்தினை உற்பத்தி செய்வதற்கும், “நீரா” பானத்திலிருந்து, பல்வேறு மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்வதற்கும், தென்னை வளர்ச்சி வாரியம் மற்றும் தமிழக அரசினால் அனுமதிக்கப்பட்ட தென்னை விவசாயிகள் சங்கம், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தென்னை உற்பத்தியாளர் இணையங்களுக்கு உரிமம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இதற்காக, விவசாய சங்கங்கள், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் இணையங்கள் பயன்பெறும் வகையில், “நீரா” சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கும், நவீனக் கொள்கலன்களில் அடைத்து விற்பனை செய்வதற்கும் தமிழக அரசு தென்னை வளர்ச்சி வாரியத்தின் ஒத்துழைப்புடன் மானியம் வழங்கவும் முடிவு செய்துள்ளது.

“நீரா” பான உற்பத்தி மற்றும் பல்வேறு மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்புக்கு, தென்னை வளர்ச்சி வாரியத்தின் மூலம் விவசாயிகளுக்கு வேளாண்மைத் துறை பயிற்சிகள் வழங்கும்.

தமிழக அரசின் இத்தகைய நடவடிக்கையினால், தமிழக மக்களுக்கு இயற்கையான ஊட்டச்சத்து மிக்க நீரா பானம் கிடைப்பதோடு, சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் தென்னை விவசாயிகளின் வாழ்வு வளம் பெறும். மேலும், நீரா பானத்தைப் பயன்படுத்தி நீரா சர்க்கரை, நீரா வெல்லம், நீரா தேன், நீரா லட்டு, நீரா கேக் போன்ற மக்கள் உடல் நலத்துக்கு உகந்த பொருட்களை தயாரிக்க இயலும். இப்பொருட்கள் சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்ததாகும். மேலும், நீரா உற்பத்தியின் மூலம் 2.40 லட்சம் பணியாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு ஏற்றமளிக்கக் கூடிய பல சிறப்புகளைக் கொண்ட “நீரா” பானத்திற்கு தமிழக மக்கள் அனைவரும் ஆதரவுதர வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே தமிழ்நாட்டில்  பனைத் தொழிலாளர் நல வாரியத்தின்  மூலம் பதநீர்  உள்பட பனை பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.