டில்லி,

பாராளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட ஜிஎஸ்டி துணை மசோதாக்களுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்தார்.

கடந்த மாதம் 20ந்தேதி நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஜிஎஸ்டி துணை மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்பட்டது.

அதைத்தொடர்ந்து பாராளுமன்றத்தில் இந்த துணை மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

ஜிஎஸ்டி மசோதா கடந்த 2005ம் ஆண்டு  காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி  அரசால் கொண்டு வரப்பட்டது.  ஆனால், மாநிலங்களின் எதிர்ப்பு காரணமாக நிறை வேற்ற இயலவில்லை. அதைத்தொடர்ந்து பாரதியஜனதா அரசு 2015, மே மாதம் மீண்டும்  இந்த மசோதாவை மக்களவையில் அறிமுகப்படுத்தியது.

போதிய பலம் இல்லாத காரணத்தால், மாநிலங்களவையில் சட்டத்தை நிறைவேற்ற முடிய வில்லை. பின்னர் மாநிலங்களின் விருப்பத்திற்கேற்ப  சில திருத்தங்களுக்கு பிறகு, எதிர்க் கட்சிகளின் ஆதரவுடன் மாநிலங்களவையிலும் ஜிஎஸ்டி மசோதாவை வெற்றிகரமாக நிறைவேறியது.

அதைத்தொடர்ந்து துணைமசோதாக்களை  கடந்த மாதம் இறுதியில் பாராளுமன்ற இரு அவைகளிலும் தாக்கல் செய்தது.

இரு அவைகளிலும் நிறைவேறிய துணைமசோதாக்கள் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.

ஜிஎஸ்டி தொடர்பான, நான்கு துணை மசோதாக்களுக்கும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று ஒப்புதல் வழங்கினார்.

இதையடுத்து ஜிஎஸ்டி வரி ஜூலை 1 முதல் நாடு முழுக்க அமலுக்கு வருகிறது.