டில்லி:

ஜம்மு-காஷ்மீரில் இரண்டு மக்களவை தொகுதிகள் உள்பட 8 மாநில சட்டமன்ற தொகுதிகளுக்கு  இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது.

ஜம்மு-காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகர் மக்களவை தொகுதியில் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லாவுக்கும், மக்கள் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் நசீருக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இதற்காக 1500 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 12.61 லட்சம் மக்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்கின்றனர். இதனிடையே காஷ்மீரில் தேர்தல் தொடர்பாக 3 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

காஷ்மீர் பிரிவினைவாதிகள் தேர்தலை புறக்கணிக்க அழைப்பு விடுத்துள்ளதால் பலத்த பாதுகாப்புகள் போடப்பட்டுள்ளன. இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. ஆனந்த்நாக் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது.

இதேபோல் அசாமின் தேமாஜி சட்டமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் ரானோஜ் பேகுவுக்கும், காங்கிரஸ் வேட்பாளர் பீபுல் சோனாவாலுக்கும் கடும் போட்டி நிலவுகிறது.  மேலும் டில்லியின் ரஜோரி கார்டன் சட்டசபை தொகுதி, கர்நாடகாவில் குண்டுல்பேட்டை, நஞ்சாங்குட் தொகுதிகளுக்கும், ராஜஸ்தானின் தோல்பூர், மேற்கு வங்கத்தின் தக்சின் தொகுதி, இமாச்சல பிரதேசத்தின் போரன்ஜ், ஜார்கண்டின் லிடிபரா தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது.