ராஞ்சி,

ராஜஸ்தானில் பசுகாவலர்களால் முஸ்லிம் ஒருவர் கொல்லப்பட்ட நிகழ்வைத் தொடர்ந்து காதலித்த குற்றத்துக்காக ஜார்கண்டில் முஸ்லிம் இளைஞர் மரத்தில் கட்டி வைத்து அடித்து கொல்லப்பட்டிருக்கிறார்.

ஜார்கண்ட் மாநிலம் கும்லா நகரைச் சேர்ந்த முகம்மது சாலிக் என்ற இளைஞரும் அந்த ஊருக்குப் பக்கத்திலிருக்கும் சோசோ என்ற கிராமத்தைச் சேர்ந்த இந்துமத  பெண்ணும் காதலித்து வந்துள்ளனர்.

கடந்த புதன் கிழமை ராமநவமியன்று கும்லா நகரில் இருவரும் சந்தித்து உரையாடினர். பின்னர் இருவரும் ஒரு ஸ்கூட்டியில் அந்தப் பெண்ணின் கிராமத்துக்குச் சென்றனர்.

இதில்தான் பிரச்னை எழுந்தது. கிராமத்துக்குள் சென்றதுமே அவர்களை வன்முறையாளர்கள் சுற்றி வளைத்துக் கொண்டனர். முகம்மது சாலிக்கை மட்டும் தனியே இழுத்துச் சென்று மரத்தில் கட்டி வைத்து விஷமிகள் சரமாரியாக அடித்துள்ளனர்.

மயக்கமடைந்த நிலையில் மருத்தவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட முகம்மது சாலிக் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.  இச்சம்பவத்தை அடுத்து கும்லா நகரில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

உத்தரபிரதேசம், ராஜஸ்தான், ஜார்கண்ட் உள்ளிட்ட  பாஜக ஆளும் வடமாநிலங்களில் இஸ்லாமியர்கள் தொடர்ந்து கொன்றொழிக்கப்பட்டு வருவது நாட்டில் அசாதாராண சூழல் நிலவுவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.