லக்னோ,

நாம் எதைச் சாப்பிட வேண்டும் என்பதை அரசு முடிவு செய்யக்கூடாது, பசு வதைக் கூடங்கள் தொடர்பான முடிவை திரும்ப பெறுவது தொடர்பாக உத்தரபிரதேச அரசு 10 நாளில் முடிவுசெய்ய வேண்டும் என அலகாபாத் உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

உத்தரபிரதேச தேர்தலில் பாஜக பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்துள்ளது.  முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆதித்யநாத்  சட்டவிரோத பசு வதைக்கூடங்களை மூடுவது, பெண்களுக்கு எதிரான ரோமியோக்களை ஒடுக்குவது என  அதிரடியான   நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

இதனால் பல்வேறு விமர்சனங்கள் அவர்மீது எழுப்பட்டு வருகின்றன.  பசு வதைக் கூடங்களை மூடுவதை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கின் விசாரணை நீதிபதிகள் அம்ரேஷ்வர் பிரதாப், சஞ்சய் கர்காலி ஆகியோர் முன்னிலையில்  நடைபெற்றது.

வழக்கு முடிவுற்ற நிலையில் தீர்ப்பை 3 ம் தேதி வாசித்த நீதிபதிகள்,   எந்த உணவை சாப்பிடவேண்டும், எந்த உணவுப் பொருள்களை விற்பனை செய்ய வேண்டும் என்பதெல்லாம் தனிமனித உரிமை என்று கூறினர்.  மேலும்,  உத்தரப்பிரதேசத்தில் பல்வேறு வகையான உணவு முறைகளையும் கலாச்சாரத்தையும் கொண்ட மக்கள் வாழ்வதால்தான் மதச்சார்ப்பற்ற தன்மைக்கு முன்னோடியாக இம்மாநிலம் விளங்குவதாகவும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

அதனால் மக்களின் வாழ்வுரிமையை பறிக்காமல் 10 நாளில்  பசுவதைக்கூடங்களை மூடும் சட்டத்தைத் திரும்ப பெற வேண்டும் என  நீதிபதிகள் அறிவுறுத்தினர்.  மேலும்  உடலுக்கு உகந்த உணவுகளை கெடுதலானவை என்று கருதக்கூடாது என்றும் சத்தான உணவுகளை மக்களுக்கு அரசே வழங்க வேண்டும் என்றும் அந்தத்தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

லக்னோ நீதிமன்றத்திலும் பசுவதைக் கூடங்களை மூடும் சட்டத்தை எதிர்த்து ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அவை அனைத்தும் ஒரே வழக்காக வரும் 13 ந் தேதி விசாரனைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.