ராமேசுவரம்:

மீனவர்கள் பிரச்சினை குறித்து கேட்டறிவதற்காக  ராமேசுவரம் வந்த திரைப்பட இயக்குனர் கவுதமன், “மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களக்கு ஆயுதம் அளிக்க வேண்டும்” என்று மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தினார்.

ராமேசுவரம் வந்த இயக்குநர் வ.கவுதமன், துறைமுக கடற்கரையில் மீனவர்களுடன் ஆலோசனை நடத்தினார். விசைப்படகு மீனவர் சங்க தலைவர்கள் போஸ், யேசுராஜா, எமரிட், சகாயம் உள்ளிட்ட மீனவர்கள் இலங்கை கடற்படையால் மீனவர்கள் படும்  சிரமங்களையும்,  துயரங்களையும் கவுதமனிடம் விளக்கினர். அடுத்து கவுதமன் துறைமுகப் பகுதிக்கு சென்று மீனவர்கள் மீன் பிடிக்க பயன்படுத்தும் படகு மற்றும் வலைகளை பார்வையிட்டார்.

பிறகு செய்தியாளர்களை சந்தித்த கவுதமன் பேசியதாவது:

“கடந்த மாதம் ராமேசுவரத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற பிரிட்ஜோ என்ற மீனவர்  இலங்கை கடற்படையால் கொடூரமாகச் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தை கண்டித்தும், மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தியும் தங்கச்சிமடத்தில் மீனவர்கள் ஒரு வாரத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தினார்கள். அவர்களிடம் மத்திய அமைச்சர்கள் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்றி விட்டனர்.

மீனவர்கள் வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்த அதே நாளில் மீன் பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டதும் நடந்தது.

தமிழக மீனவர் பிரிட்ஜோ சுட்டுக் கொல்லப்பட்டது குறித்தும், மீனவர் கொலைக்கு காரணமான இலங்கை கடற்படையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஐ.நா.சபையில்  வலியுறுத்தி பேசியுள்ளேன்” என்று கவுதமன் தெரிவித்தார்.

மேலும் அவர், “மீனவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய இந்திய கடலோர காவல்படையும், தமிழக கடலோர காவல் படையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன. . கச்சத்தீவிலேயே நிரந்தரமாக கடற்படை முகாமையும் அமைத்து ஏராளமான இலங்கை கடற்படையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல முடியாத அளவிற்கும், மீனவர்களை கைது செய்வதற்காகவும் கச்சத்தீவு அருகிலேயே இலங்கை கடற்படையினர் கப்பல்களை நிறுத்தி வைத்துள்ளனர்.

கச்சத்தீவையும், மீனவர்களின் மீன் பிடி உரிமையையும் மீட்டு கொடுத்து மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்.

மீன் பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு ஆயுதங்கள் ஏந்திய பாதுகாப்பு கொடுங்கள்.  அல்லது மீன் பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு ஆயுதம் கொடுக்க வேண்டும். அவர்களின் பாதுகாப்பை அவர்களே பார்த்துக் கொள்வார்கள்” என்று கவுதமன் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய கவுதமன், “வரும் 25–ம் தேதி ராமேசுவரம் மீனவர்கள் நடத்தும் கச்சத்தீவு பயண போராட்டத்தில் நானும் தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் ஏராளமானோர் கலந்து கொள்வார்கள்”  என்று தெரிவித்தார்.