தமிழகம் உள்பட தென்மாநில லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக் கடந்த மாதம் 30ந்தேதி முதல் நடைபெற்று வருகின்றன.
டீசலுக்கு விதிக்கப்பட்ட வாட் வரி உயர்வை ரத்து செய்யவும், இன்சூரன்ஸ், சாலை வரி, ஆர்.டி.ஓ கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
போராட்டத்தை முடிவு கொண்டு வரும் வகையில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் லாரி உரிமையாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.
இந்த பேச்சு வார்த்தையில் 70 கிலோ மீட்டர் கீழ் செல்லும் வாகனங்களுக்கு வேக கட்டுபாட்டு கருவி பொருத்தும் திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. , ஆர்.டி.ஓ அலுவலகத்தில் உயர்த்தப்பட்ட கட்டணமும் குறைக்கப்பட்டுள்ளது. தாமதமாக எப்.சி காட்டினால் ரூ.50-ல் இருந்து ரூ.20 ஆகவும், புதிய வாகன பதிவுக்கு ரூ.1500-ல் இருந்து ரூ.1000-ஆக கட்டணங்கள் குறைக்கப்பட்டன.
மேலும், பெட்ரோல், டீசல் மீதான வாட்வரி குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்
ஆனால், மத்திய அரசு உறுதியளித்த இன்சூரன்ஸ் பிரீமியம் தொடர்பாக இன்சூரன்ஸ் ஒழுங்கு முறை ஆணையம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்து உள்ளது.
இன்று டில்லியில் மத்திய போக்குவரத்து துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது.
இன்று 6வது நாளாக லாரிகள் ஸ்டிரைக் நீடித்து வருகிறது. ஸ்டிரைக் காரணமாக காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.
ஸ்டிரைக் காரணமாக 36 ஆயிரம் கோடி மதிப்புள்ள சரக்குகள் தேக்கம் அடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டுமே ரூ.8 ஆயிரத்து 500 கோடி மதிப்புள்ள சரக்குகளும், சேலம் மாவட்டத்தில் ரூ.1200 கோடி மதிப்புள்ள சரக்குகளும் தேக்கம் அடைந்துள்ளது.
ஸ்டிரைக் குறித்து மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தமிழ்நாடு தலைவர் குமாரசாமி கூறியதாவது,
தமிழக அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சில உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இன்சூரன்ஸ் தொடர்பாக இன்சூரன்ஸ் ஒழுங்கு முறை ஆணையம் நடத்திய பேச்சு வார்த்தையில் பிரீமியம் கட்டணத்தை குறைக்காததால் சுமூக முடிவு ஏற்படவில்லை.
இதன் காரணமாக லாரிகள் போராட்டம் தொடர்ந்து வருகிறது. தென்மாநிலை லாரிகள் ஸ்டி ரைக்குக்கு ஆதரவாக வருகிற 8-ந் தேதி முதல் நாடு முழுவதும் லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்க போவதாக அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக நாடு முழுவதும் சுமார் 60 லட்சம் லாரிகள் ஓடாது என தெரிகிறது.
மத்திய அரசு இன்சூரன்ஸ் பிரீமியம் தொடர்பான பிரச்சினையில் தலையீட்டு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.