சென்னை,

ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியான திருவொற்றியூரில் திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் மீனவ மக்களிடம் சந்தித்து உரையாடினார்.

ஏற்கனவே, கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு   ‘நமக்கு நாமே’ திட்டம் மூலம்  தமிழகம் முழுவதும் சென்று அந்தந்த பகுதி மக்களிடம் கலந்துரையாடினார்.

தற்போது தேர்தல் நடைபெறும் ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட திருவொற்றியூர் பகுதியிலும் இன்று பல்வேறு தரப்பு மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த பொதுத் தேர்தலுக்கு முன்பு தமிழ்நாடு முழுவதும் சென்று ‘நமக்கு நாமே‘ சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களை சந்தித்தார்.

தற்போது அதே நிகழ்ச்சி,  ‘தேவைகளை நோக்க, தொல்லைகளை நீக்க’ என்ற தலைப்பு மாற்றப்பட்டு நடைபெற்றது.

திருவொற்றியூர்  டி.கே.பி. திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த சந்திப்புக்கு ஆர்.கே.நகர் தொகுதியை சேர்ந்த 150 மீனவ பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

அவர்களுடன் உரையாடிய ஸ்டாலின், அவர்கள் ஒவ்வொருவரையும் பேசச்செய்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

மீனவர்கள் கூறிய முக்கிய கோரிக்கைகளை  குறிப்பு எடுத்துக் கொண்ட ஸ்டாலின் இறுதியில் தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ் வெற்றிக்கு பாடுபடுமாறு கேட்டுக் கொண்டார்.