சென்னை,
தமிழகத்துக்கு வறட்சி நிவாரண நிதியாக 1712 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி மற்றும் வர்தா புயல் சேதத்திற்காக நிவாரண நிதியாக 39 ஆயிரத்து 595 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என தமிழக அரசு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருந்தது.
ஆனால் தமிழகத்திற்கு 1748 கோடியே 28 லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக வழங்கப்படும் என்று மத்திய அரசு அண்மையில் அறிவித்தது.
இந்த நிலையில் தமிழகத்திற்கு 1712 கோடியே 10 லட்சம் ரூபாய் மட்டுமே தேசிய நிவாரண நிதியில் இருந்து ஒதுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் தமிழக வறட்சியை பார்வையிட மத்திய அரசு 9 பேர் கொண்ட குழுவினர் வந்தனர். 4 குழுக்களாக பிரிந்து 24ந்தேதிவரை தமிழகம் முழுவதும் சென்று ஆய்வு நடத்தினார்.
தமிழ்நாட்டில் உள்ள 16,682 கிராமங்களில் 13,305 கிராமங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், அவற்றில் 1564 கிராமங்கள் 87 சதவீதம் பகுதிகளில் 50 சதவீதத்துக்கும் மேல், வறட்சி பாதித்துள்ளதாக கணக்கிடப்பட்டது.
அப்போது, வறட்சியை பார்வையிட்ட மத்திய அரசு அதிகாரி ஒருவர் தமிழகத்தில் வறட்சி என்பதில் எங்களுக்கு மாற்றுக்கருத்தில்லை. தமிழகம் முழுவதும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. பயிர்கள் கருகியுள்ளது என்று கூறினார்.
தமிழகத்தில் நீடித்துவரும் வறட்சி நிலையை சமாளிக்கவும் ‘வர்தா’ புயல் பாதிப்புகளுக்கும் நிவாரண நிதியுதவியாக ரூ.39,565 கோடி அளிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் கோரிக்கை விடுத்திருந்தார்.
ஆனால், மத்திய அரசு அறிவித்திருப்பதோ 1712 கோடி மட்டுமே. இது யானைப்பசிக்கு சோளப்பொறி போன்றதே….