வேலூர்:

தமிழக நெடுஞ்சாலைகaளில் உள்ள மைல் கற்களில் ஹிந்தி மீண்டும் இடம்பெற தொடங்கியுள்ளது. இந்த முறை மைல் கற்களில் இருந்து ஆங்கிலத்தை வெளியேற்றிவிட்டு ஹிந்தி இடம்பெற்று வருகிறது. ஹிந்தி தெரியாத மாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் பயணிகள், வாகன ஓட்டுனர்கள், தொழிலதிபர்கள், மருத்துவ, சுற்றுலா பயணிகள் அவதிப்படும் சூழல் உருவாகியுள்ளது.

எல்லை மாவட்டங்களான வேலூர், கிருஷ்ணகிரியில் கடந்த சில மாதங்களாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சத்தமில்லாமல் ஆங்கிலத்தை மைல் கற்களில் இருந்து அகற்றிவிட்டு ஹிந்தியை திணித்து வருகிறது. நெடுஞ்சாலைகளில் உள்ள வழித்தட தகவல்கள் மாநில மொழி, ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய 3 மொழிகளில் இடம்பெற வேண்டும் என்ற அரசின் கொள்கைக்கு எதிராக உள்ளது.

தேசிய நெடுஞ்சாலை எண் 75 மற்றும் 77 அடங்கியுள்ள வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஊர்களின் பெயர்கள் ஹிந்தி, தமிழ் அல்லது கன்னடத்தில் இடம்பெற்றுள்ளது. ஆங்கிலத்தில் பெயர்கள் நீண்ட நாட்களாக பயன்படுத்த வில்லை. 533 கிலோமீட்டர் தூரம் உள்ள தேசிய நெடுஞ்சாலை 75 கர்நாடகா தேசிய நெடுஞ்சாலை எண் 73ல் உள்ள பந்த்வாலை, வேலூர் மாவட்டத்தில் உள்ள பெங்களூரு & சென்னை பைபாஸ் எண் 48ம்& இணைக்கிறது.

மேலும் இந்த சாலை கர்நாடகாவில் பெங்களூரு, கோலார், ஆந்திராவில் வெங்கடகிரிகோட்டா, தமிழகத்தில் பேரனாம்பட், குடியாத்தம், காட்பாடி ஆகிய பகுதிகளை கடந்து செல்கிறது. கடந்த வாரம் சித்தூர்& வேலூர் இடையில் உள்ள மைல் கற்களில் ஆங்கில பெயர்களை அழித்துவிட்டு ஹிந்தியில் பெயர் எழுதும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். மேலும், தமிழ்நாட்டின் ஊர் பெயர் ஹிந்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் மொழியாக்கம் செய்யப்பட்டு எழுதப்படுகிறது. உதாரணமாக குடியாத்தம் என்பது குதியாத்தம் என்று ஹிந்தியில் எழுதப்பட்டுள்ளது.

இதேபோல் கிருஷ்ணகிரியுடன் இணைக்கும் நெடுஞ்சாலை எண் 77ல் திண்டிவனம், திருவண்ணாமலை, செஞ்சி ஆகிய பகுதிகளிலும் மைல் கற்களில் ஊர் பெயர்கள் ஹிந்தி மற்றும் தமிழில் மட்டுமே இடம்பெற்றுள்ளது. வேலூரில் உள்ள வர்த்தகர்களும், சுற்றுலா பயணிகளும் இந்த மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

முக்கிய வழித்தடத்தில் இவ்வாறு மாற்றம் செய்வதால் ஹிந்தி, தமிழ் தெரியாதவர்கள் அவதிப்படும் சூழல் ஏற்படும். வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் ஆண்டுதோறும் 54 லட்சம் பேர் சிகிச்சை பெறுவதாக பதிவேடுகள் தெரிவிக்கின்றன. இதில் 35 சதவீதம் பேர் மேற்குவங்கம், கேரளா, ஆந்திராவில் இருந்து வருகின்றனர். இது தவிர மத்திய கிழக்குநாடுகள் உள்பட 400 வெளிநாட்டு நோயாளிகளும் இந்த மருத்துவமனைக்கு வருகின்றனர்.

மைல் கற்களில் ஆங்கிலத்தில் பெயர்கள் இல்லாமல் இருப்பது வெளிமாநில நோயாளிகள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். அதேபோல் ஹிந்தி பேசாத மாநிலங்களில் இருந்து கல்வி கற்க வரும் மாணவர்களுக்கும் இது அசவுகர்யத்தை ஏற்படுத்தும்.

‘‘வேலூரில் உள்ள தோல் தொழிற்சாலைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்’’ என்று வானியம்பாடி தோல் தொழிற்சாலை சங்க பொதுச் செயலாளர் முகமது முபீன் தெரிவித்தார். மேலும், அவர் கூறுகையில், ‘‘மேற்கு வங்கம், பஞ்சாப் மற்றும் இந்தியாவில் இதர பகுதிகளில் இருந்து 100 முதல் 150 தொழிலதிபர்கள் ரானிப்பேட்டை, ஆம்பூர், குடியாத்தத்திற்கு வருவார்கள். நெஞ்சாலைகளில் பயணம் மேற்கொள்ள தமிழ் அல்லது ஹிந்தியை கற்க மக்களை வலுக்கட்டாயப்படுத்தும் செயலாகும்’’ என்றார்.

இது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணைய அதிகாரிகள் பதில் கூற மறுத்துவிட்டனர். இது மத்திய அரசின் கொள்கை முடிவு என்று அவர்கள் தெரிவித்தனர். மாநிலம் முழுவதம் 3 ஆயிரத்து 800 கிலோ மீட்டர் சாலைகளை இந்த ஆணையம் பராமரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.