டில்லி:
நாடு முழுவதும் ஒரே சீரான வரியை அமல்படுத்தும் நோக்கில், சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
ஜூலை 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் இந்த புதிய ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை அமல்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
ஜி.எஸ்.டி.யில் 5% 12% 18% 28% என நான்கு அடுக்குகளாக வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பான மசோதா ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பான 4 துணை மசோதாக்கள் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
மத்திய சரக்கு-சேவை வரி மசோதா (சி.ஜி.எஸ்.டி.), ஒருங்கிணைந்த சரக்கு-சேவை வரி மசோதா (ஐ.ஜி.எஸ்.டி.), யூனியன் பிரதேச சரக்கு-சேவை வரி மசோதா (யு.டி.ஜி.எஸ்.டி.) மற்றும் ஜி.எஸ்.டி. யால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடு செய்யும் மசோதா என 4 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மசோதாக்கள் மீது இன்று விவாதம் நடத்தப்பட்டது. நீண்ட நேர விவாதத்திற்குப் பிறகு திருத்தங்களுடன் கூடிய இந்த மசோதாக்கள் மீது குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதையடுத்து 4 துணை மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன.