விசாகப்பட்டினம்:
தியோதர் டிராஃபி கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் தமிழ்நாடு அணி, 42 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா ரெட் அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தது.
இந்தியா ரெட், இந்தியா புளூ, விஜய் ஹசாரே தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாடு ஆகிய மூன்று அணிகளுக்கு இடையிலான தியோதர் டிராஃபி ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது.
ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு போட்டியில் மோத வேண்டும். இதில், முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகளுக்கு இடையே இறுதிப்போட்டி நடைபெறும்.
ஏற்கனவே, இந்தியா ரெட் அணி, இந்தியா புளூ மற்றும் தமிழ்நாடு அணிகளை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தது.
தமிழ்நாடு அணி ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்றது. புளூ அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்தது.
இதன் காரணமாக தமிழ்நாடு அணிக்கும், இந்தியா ரெட் அணிக்கும் இடையே இறுதிப்போட்டி நடைபெற்றது.
விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்று முதலில் ஆடிய தமிழ்நாடு அணி, 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 303 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக தினேஷ் கார்த்திக் சதம் தாண்டி மொத்தம் 126 ரன்கள் அடித்து தமிழக அணியின் வெற்றியை உறுதி செய்தார். ஜெகதீசன் 55 ரன்கள் சேர்த்தார். இந்தியா ரெட் தரப்பில் தவால் குல்கர்னி 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதையடுத்து 304 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா ரெட் அணியின் துவக்க வீரர் பார்த்தீவ் பட்டேல் 15 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய தவான் 45 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து ஆடிய குர்கீரத் சிங் 64 ரன்களில் விக்கெட்டை இழந்தார். மணீஷ் பாண்டே (32), ஹர்பிரீத் சிங் (36), அக்சய் கார்னிவர் (29) தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, 261 ரன்களில் அந்த அணி சுருண்டது.
இதனால், தமிழ்நாடு அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தியோதர் கோப்பையை கைப்பற்றியது. ஆட்டநாயகனாக தினேஷ் கார்த்திக் தேர்வு செய்யப்பட்டார்.
தமிழ்நாடு அணி, விஜய் ஹசாரே கோப்பையை கைப்பற்றிய 3 வாரங்களுக்குப் பிறகு இப்போது தியோதர் கோப்பையையும் கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளது.