டெல்லி:

‘‘நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தல்களில் வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு நடந்துள்ளது. அதனால் இந்த எ ந்திரங்களை சாப்ட்வேர் வல்லுனர்களை கொண்டு ஆய்வு நடத்த வேண்டும்’’ என்று வக்கீல் சர்மா என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.

‘‘எந்திர முறைகேடு குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த மத்திய அரசுக்கு உத்தரவிடவேண்டும். எந்திரத்தில் எளிதில் இடை புகுந்து மாற்றங்களை செய்யமுடியும்’’ என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

‘‘எந்திரத்தின் தரம், சாப்ட்வேர், வைரஸ் தாக்குதல், முடக்கும் தன்மை ஆகியவற்றை சாப்ட்வேர் வல்லுனர் அல்லது ஆய்வு கூட வல்லுனர்களை கொண்டு பரிசோதித்து நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். மேலும், எந்திரத்தின் தொழில்நுட்பம், எ ந்திரவியல், சாப்ட்வேர் விபரங்கள் ரகசியமாக இருக்கும் வரை வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு நடக்கவாய்ப்பு இல்லை என்று தேர்தல் கமிஷன் ஏற்கனவே ஒப்புக் கொண்டுள்ளது.

அதனால் இந்த விபரங்களை ரிவர்ஸ் என்ஜினியரிங் மூலம் வல்லுனர்களால் கண்டுபிடிக்க வாய்ப்பு உள்ளது. கம்பியில்லா கருவி அல்லது சாப்ட்வேர் தயாரிக்கப்பட்டு அதன் மூலம் வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளை மாற்றி அமைக்க முடியும். எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் இதை செய்ய முடியும்’’ என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேஹர், நீதிபதிகள் சந்திரசுத், கவுல் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. இது தொடர்பாக பதிலளிக்க தேர்தல் கமிஷனக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். இது தொடர்பாக மத்திய அரசுக்கு நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடவில்லை.

நடந்து முடிந்த 5 மாநில தேர்தல்களில் வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு செய்து பாஜ வெற்றி பெற்றதாக எதிர்கட்சிகள் குற்ற ச்சாட்டுக்களை சுமத்தினர். இதைதொடர்ந்து தொடரப்பட்ட இந்த பொது நல வழக்கில் தான் தேர்தல் கமிஷனுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.