டெல்லி,
வருமான வரி செலுத்துவது, மத்திய மாநில அரசுகளின் இலவச சேவைகளை பெறுவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் ஆதார் எண் கண்டிப்பாக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக இப்போது ஆதார் அட்டையில் பயனாளரின் தொலைபேசி எண்ணை இணைப்பதும் அவசியமாக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வழக்கு ஒன்று உச்சநீதிமன்றத்தில் நடந்தது.கடந்த பிப்ரவரி 6 ம் தேதி நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், கைபேசி எண்களின் முகவரிகள் உள்ளிட்ட விபரங்கள் இன்னும் ஒரு வருடத்தில் சரிபார்த்துவிட வேண்டும் என கூறியிருந்தது.
இதைத் தொடர்ந்து இந்திய தனித்துவ அடையாள ஆணையம்,இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், பிரதமர் அலுவலகம் ஆகியவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்த ஆலோசனை மேற்கொண்டன.
இந்நிலையில் மத்திய தொலை தொடர்புத் துறை தொலைபேசி நிறுவனங்களுக்கு குறிப்பாணை அனுப்பியுள்ளது. அதில், தங்கள் வாடிக்கையாளர்கள் அவர்களது தொலைபேசி எண்ணை ஆதார் எண்ணுடன் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும். இல்லையென்றால் ஒரு வருடத்தில் இணைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.