ஐதராபாத்,
வயது சான்றிதழ் கொடுத்தால்தான் திருமணம் நடக்கும் இங்கே அல்ல, தெலங்கானாவில். தெலங்கானாவில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் சிறுவர் சிறுமிகளுக்கு திருமணம் நடைபெற்று வருவதாக கிடைத்த தகவலை அடுத்து சில கிராமங்களில் ஆய்வு நடத்திய சமூக நலத்துறை அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
காரணம், 18 வயது நிரம்பாத சிறுமிகளுக்கும் 21 வயது நிரம்பாத சிறுவர்களுக்கும் இடையே ஏராளமான திருமணங்கள் நடைபெற்று இருந்தன. இதையடுத்துதான் திருமணத்தின்போது கண்டிப்பாக வயது சான்றிதழை காட்டவேண்டும் என உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் 30 சதவித சிறுவர் திருமணம் நடைபெற்றுள்ளது.
இதுதொடர்பாக விகாராபாத் மாவட்ட அதிகாரி பிரேம்குமார் என்பவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, பந்தல் அமைப்பவர்கள், அச்சக உரிமையாளர்கள், திருமணமண்டப உர்மையாளர்கள், குருக்கள் போன்றவர்களிடம் வயது சான்றிதழ் வாங்காமல் எதையும் செய்யவேண்டாம் என வலியுறுத்தியுள்ளதாக கூறினார்.
இந்த மார்ச் மாத த்துக்கும் மே மாதத்துக்கும் இடையே நிறைய திருமணம் நடக்கும் என்று கூறினார். இந்திய சட்டப்படி பெண்ணுக்கு 18 வயதும் ஆணுக்கு 21 வயதும் இருக்கவேண்டும். இந்த வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்குத் திருமணம் செய்து வைக்கும் பெற்றோருக்கு இரண்டாண்டு சிறையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும்.