நெட்டிசன்:
ஏழுமலை வெங்கடேசன்
செல்வாக்கால் நினைத்ததை ஒன்றுவிடாமல் சாதிப்பவர்கள், ஒரு கட்டத்தில் என்ன செய்ய விரும்பினாலும் விளங்காமல் போய்க்கொண்டேஇருக்கும். ஆடிய ஆட்டத்திற்கான பாவக்கூலி என்றும் இதனை சொல்லலாம்.
ஜெயலலிதாவுக்கு பிறகு எதையெல்லாம் சாதிக்கலாம் என்று துடித்தாரோ சசிகலா, அத்தனை விஷயத்திலும் அடிமேல் அடிவாங்கிகொண்டிருக்கிறார். காரணம்..அவசரம், பேராசை, குறுக்குபுத்தி இதுபோல நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.
ஓபிஎஸ்சை முதலமைச்சர் பதவியில் நீடிக்கவிட்டு பின்னாலிருந்து ராஜமாதா அந்தஸ்த்தில் இயக்கியிருக்கலாம். கட்சியை பொதுச்செயலாளர் பதவி மூலம் கைப்பற்றியவுடனே, முதலமைச்சராக துடித்த அவசரம்..நாடே மிரண்டுபோன ஒரு சமாச்சாரம். ஆனால் ஓபிஎஸ் தியானத்திற்கு பிறகு, எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது..
அது மோடி பலமா, சட்டமா, இயற்கையா எதுவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுபோகட்டும்.. சசிகலாவையும் அவர் குடும்ப சீமான்களையும் அடித்துப்போட்டுக்கொண்டே இருக்கிறது..
ஜெயலலதா மாதிரி நடை, உடை பாவனை, சிகையலங்காரம் கார் பவனி என முதலமைச்சர் கனவில் கவர்னர் மாளிகைக்கு சென்றார்.. பதவியேற்பு விழாவுக்காக பல்கலைக்கழக மண்டபம் தயாரானதும் அதன்பிறகு பந்தல் பிரிக்கப்பட்டு ஒப்பாரி வைத்த சசிகலாவை, ஏதோ ஒரு சக்தி எங்கேயோ தூக்கி வீசியது.
சொத்துக்குவிப்பு வழக்கில் வரவேண்டிய தீர்ப்பு, தடைக்கல்லாக அமைந்து கவர்னருக்கு வாய்தா கொடுக்க, அரசியல் சாசன கடமை அதன்போக்கில் விளையாடியது. இடையில் வெளிவந்த இறுதித் தீர்ப்போ, சசிகலா சுதந்திரமாக வெளியே உலவக்கூட முடியாமல் ஒரு தண்டனை கைதியாக வெளி மாநில சிறைக்குள் வாரிப்போட்டது.
நினைத்துபாருங்கள், 700 கிலோ மீட்டர் நீளமும் 450 கிலோ மீட்டர் அகலமும் கொண்ட ஒரு பெரிய மாநிலத்தை கட்டியாள துடித்தவருக்கு, ஒரு சிறிய அறைதான் நான்கு வருடங்களுக்கு கதி.. விரும்பியபடி உண்ணவும், ஆடைகளை அணியவும்கூட இயலாது என ஆகிறதென்றால், அதனை என்னவென்று விவரிப்பது. மரண வலியைவிட பல மடங்கு அதிகமானது இந்த நிலை.
ஜெயலலிதாவால் கடைசிவரை கட்சியில் சேர்க்கப்படாத தினகரனை திடீரென சேர்த்து ஒரே நாளில் துணைப்பொதுச்செயலாளர் என்றார்கள். கட்சியில் இல்லாதபோதே இந்த தினகரனை பக்கத்தில் வைத்துக்கொண்டுதான் ஆளுநர் மாளிகையில் சசிகலா ஆட்சிமைக்க உரிமை கோரினார்.. மூத்த அமைச்சர்கள்கூட கும்பலாகத்தான் உட்காரவைக்கப்பட்டார்கள்.. அதாவது எதைப்பற்றியும் யாரைப்பற்றியும் கவலையே இல்லை, யார் நம்மை என்ன செய்துவிடமுடியும் என்கிற மனநிலைதானே இது?
தினகரனுக்கு கட்சியில் மகுடம் சூட்டப்பட்டு இடைத்தேர்தல் வெற்றி மூலம் முதலமைச்சர் இருக்கையை பிடிக்க அடுத்தகட்ட நகர்வு ஆரம்பமானது.. இங்கே ஒரு ஆறுதலான விஷயம், ஓபிஎஸ் போய் சசிகலா இல்லையென்றாகிவிட்ட பிறகு நேரடியாகவே அவர்கள் குடும்பத்தை சேர்ந்த ஒருவர் முதலமைச்சர் கனவில் கவர்னர் மாளிகை நோக்கி ஓடாததுதான்…
சரி விஷயத்துக்கு வருவோம். இப்போது என்ன ஆயிற்று? எதிரில் நின்று ஓபிஎஸ் மல்லுக்கட்டியதில் கட்சியின் ஆணிவேரான இரட்டை இலை சின்னமே பறிபோயுள்ளது..
அதிமுக என்ற ஒரிஜினல் பெயரை இரு தரப்புமே பயன்படுத்தக்கூடாது என்று தேர்தல் ஆணையம் நாட்டாமை செய்துவிட்டது..
பெரும்பான்மை எம்எல்ஏக்கள் கைவசம் இருந்தும் எப்படி சசிகலாவால் முதலைமைச்சராக வரமுடியாமல் போனதோ, அதேமாதிரி, ஆட்சி மற்றும் கட்சியின் நிர்வாகிகளின் பெரும்பான்மை பலம் தங்கள் கணக்கில் இருந்தும் தினகரன் தரப்பால் சின்னைத்தை தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை..
முக்கியமான கட்டத்தில் இரண்டாவது முறையாக குப்புறத்தள்ளி கும்மாங்குத்து விட்டிருக்கிறது அந்த சக்தி.. சகல பலமும் கையில் இருந்தும் நினைத்தபடி எதுவுமே நடக்கவில்லையே என கதற விட்டிருக்கிறது சசிகலா தரப்பை.
18 ஆண்டுகள் திமுகவுக்கும் 5 ஆண்டுகள் அதிமுகவுக்கும் என 23 ஆண்டுகால அரசியல் உழைப்புக்கு பின்னரே எம்ஜிஆரால் முதலமைச்சராக வரமுடிந்தது. ஒன்பது ஆண்டுகள் அரசியல் களத்தில் போராடி சகல எதிர்ப்புகளையும் வென்ற பிறகே ஜெயலிதாவுக்கு முதலைமைச்சர் இருக்கை கிடைத்தது.. மக்கள் அங்கீகாரம் என்ற மகத்தான வரம் மூலம் பதவியில் அவர்கள் வலம் வந்தனர்.
ஓபிஎஸ் மூன்று முறை முதலமைச்சர் என்பதுகூட மாற்று ஏற்பாட்டுக்கான நியமனம்தான். அது, மக்கள் அளித்த அங்கீகாரம் அல்ல. அதனால்தான் சசிகலா, தினகரன் வகையறாக்களைப்போலவே அவரையும் அல்லாட வைத்திருக்கிறது ஏதோ ஒரு சக்தி..
அது எதுவாக இருந்துவிட்டுபோகட்டும்..ஆனால் விழுகிற அடி, மக்கள் மத்தியில் எந்த எதிர்ப்பையும் பெறவில்லை, என்பதே உண்மை..
ஒரு முதலமைச்சர் அவருக்கான இருக்கையில் அமர்தவற்கும்., ஆபிசில் அவர் இல்லாதபோது கதவை சாத்திக்கொண்டு ஒரு பியூன் முதலமைச்சர் இருக்கையில் அமர்ந்துகொண்டு சத்தமே போடாமல் சைகைகளில் அதிகார தோரணை செய்வதற்கும் நிறையவே வித்தியாசம் உண்டு.