இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கிவைத்துவிட்டது பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
சசிகலா அணிக்கே இ.இலை சின்னத்தை அளித்திருக்க வேண்டும் என்றும், இல்லையில்லை… ஓ.பி.எஸ். அணிக்கே அளிக்க வேண்டும் என்றும் வாதப்பிரதிவாதங்கள் நடந்துவருகின்றன.
இந்த நிலையில், இரட்டை இலை சின்னத்தை அடையாளம் காட்டிய.. முதன் முதலில் அச்சின்னத்தில் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் மாயத்தேவரை தொடர்புகொண்டு பேசினோம்.
இதே அவர் பேசுகிறார்:
“அ.தி.மு.க. உருவான பிறகு, முதன் முதலாக 1973-ல் திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட்டது.
அப்போது அ.தி.மு.க. அதிமுக தேர்தல் களத்துக்கு புதிய கட்சி. ஆகவே தேர்தல் அதிகாரி என்னிடம் பல சின்னங்களைக் காட்டி தேர்வு செய்யச் சொன்னார்.
ஏணி, விளக்கு உள்ளிட்ட பதினாறு சின்னங்கள் அதில் இருந்தன.
நான் தீவிர யோசனையில் இருந்தேன். பிறகு பட்டென, இரட்டை இலையை தேர்வு செய்தேன். அதுவே சிறந்த சின்னம் என்று என் மனதுக்கு தோன்றியது.
தேர்ந்தெடுத்த பிறகு, இது குறித்து தலைவர் எம்.ஜி.ஆரிடம் சொன்னேன்.
அவர், “என்ன காரணத்துக்காக இலையைத் தேர்வு செய்தீர்கள்?’ என்று. கேட்டார்.
அதற்கு நான், “ இந்த சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பது எளிது. அதாவது யார் வேண்டுமானாலும் இந்த சின்னத்தை வரைந்துவிடலாம். தவிர இலை என்பது மக்கள் மனதில் எளிதில் பதியும்.
இன்னொரு காரணமும் இருக்கிறது. இரண்டாவது உலக யுத்தத்தில் பிரிட்டன் வெற்றி பெற்ற போது வெற்றியின் அடையாளமாக இரண்டு விரல்களை காட்டினார் அந்நாட்டு பிரதமர் வின்சென்ட் சர்ச்சில். அந்த விக்டரி சிம்பல் உலகம் முழுதும் பிரபலம். அதுபோல இச்சின்னத்தை இரு விரல்களை விரித்து இரட்டை இலை என்பதாக காட்டலாம்” என்றேன்.
எனது விளக்கத்தை ரசித்து கேட்ட எம்.ஜி.ஆர். என் கருத்தை ஆமோதித்தார்.
இதையடுத்தே இரட்டை இலையை கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட சின்னமாக எம்.ஜி.ஆர். வைத்துக் கொண்டார்’’ என்றார் மாயத்தேவர்.
தற்போது இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கி வைத்துவிட்டது குறித்து அவரிடம் கேட்டோம்.
அதற்கு அவர், “இப்போதிருக்கிற நிலையில், கட்சியும் ஆட்சியும் சசிகலா தரப்பிடமே இருக்கிறது. ஆகவே அவர்களுக்கு இரட்டை இலையை வழங்குவதுதான் நியாயம்’’
என்றார்.
இரட்டை இலை இல்லாத சூழலில் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் அதிமுக அணிகளின் நிலை எப்படி இருக்கும் என்று கேட்டோம்.
அதற்கு மாயத்தேவர், “இரட்டை இலை இல்லாவிட்டால் எந்த அணியும் வெற்றி பெற முடியாது” என்றார் சுருக்கமாக.