கோவை,
திராவிடர் விடுதலை கழக பிரமுகர் பரூக் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் இருவர் சரணடைந்துள்ளனர்.
கடந்த மார்ச் 16ந் தேதி திராவிடர் விடுதலை கழக பிரமுகர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். தொலைபேசி அழைப்பு வந்ததை அடுத்து அவர் வீட்டை விட்டு வெளியே சென்ற பரூக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
நாத்திகரான பரூக் வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக்கில் கடவுள் மறுப்பு கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு வந்தாலும், இஸ்லாம் மதத்திற்கு எதிராக கருத்து தெரிவித்தது காரணமாகவும் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டது.
அதைத்தொடர்ந்து காவல்துறையினர் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில், ஏற்கனவே, மார்ச் 17ந்தேதி தேதி போத்தனூரை சேர்ந்த அன்சத் (30) என்பவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். அதையடுத்து அக்ரம் (30), முனாஃப் (38) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந் நிலையில், நேற்று கோவை போத்தனூரை சேர்ந்த சதாம் ஹூசைன் மற்றும் சம்சுதீன் ஆகிய 2 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
ஹூசைன் என்பவர், பெங்களூரு வெடிகுண்டு வழக்கில் தொடர்புடைய கிசன் புகாரியின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் சம்சுதீனுக்கும் ஹித்துத்வா ஆர்வலர்கள் மீது பெட்ரோல் பாம் வீசிய வழக்கிற்கும் தொடர்பு உள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
இருவரையும் மார்ச் 17ந் தேதிமுதல் காவல்துறையினர் தேடி வருகின்றனர். ஆனால் காவல்துறையினர் கைது செய்வதற்கு முன் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர்.
பரூக் கொலை தொடர்பான ஜாஃபர் என்பவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.