திருவனந்தபுரம்,

இணையதள வசதி என்பது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை என்பதை இந்தியாவிலேயே முதல்மாநிலமாக கேரளா நடைமுறைப்படுத்தியுள்ளது. கேரளா சட்டமன்றத்தில்  20 லட்சம் ஏழைகளுக்கு இலவச இணைய வசதியை ஏற்படுத்தித் தரப்படும் என இடதுசாரி தலைமையிலான அரசு அறிவித்தது.

இதேபோல் வறுமைக்கோட்டுக்கு மேல் வாழ்பவர்களுக்கு மானியத்துடன் இணையதள வசதி  வழங்கப்படும் என அறிவித்தது.  இணைய வசதி என்பது ஒவ்வொரு மனிதனின் அடிப்படை உரிமை என்பதை அனைத்து நாடுகளும் உணரவேண்டும் என ஐக்கிய நாட்டு சபை வலியுறுத்தியது. அதை நடைமுறைப்படுத்தும் இந்தியாவின் முதல் மாநிலமாக கேரளா விளங்குகிறது.

இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்டு பேசிய அமைச்சர் ஐசக், ரூ100 கோடி மதிப்பில் இன்னும் 18 மாதங்களில் கே–போன் நெட்வொர்க் மூலமாக இணையதள சேவை தொடங்கப்படும் என அறிவித்தார். மேலும் அவர், இணையதள வசதியை பெறுவது ஒவ்வொரு குடிமகனின் உரிமை என்றார். அதேபோல் செல்பேசி, கணினி மூலம் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் சேவையை மக்கள் எளிதாக பெறமுடியும் என்றும் ஐசக் தெரிவித்தார்.