டெல்லி,

பல்கலை கழகங்களில் சமூக ஏற்றத்தாழ்வுகள் குறித்த ஆய்வு மையங்களுக்கு மத்திய அரசு நிதி வழங்க மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அதற்குப் பதிலாக வேதப்பாடங்கள் குறித்த கல்வி, ஆராய்ச்சிகளுக்கு நிதி வழங்கப்பட்டிருப்பதாக சமூக ஆய்வாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். 11 ம் ஐந்தாண்டு திட்ட காலத்திலும் (2007-2012), அதையடுத்த 12 ம் ஐந்தாண்டுத் திட்டக்காலத்திலும் சமூகம் சார்ந்த ஆய்வு நிறுவனங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கியது. இந்தமாதம் 31 ம் தேதியுடன் 12ம் ஐந்தாண்டுத் திட்டம் நிறைவடைகிறது. ஆனால் மத்திய அரசு இதுவரை நிதி ஒதுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுதொடர்பாக பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள பல்கலைக் கழக மானியங்களின் ஆணைக்குழுவின் துணைத்தலைவர் சுஸ்மா ரத்தோர், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் 12 ம் ஐந்தாண்டுத்திட்டக் காலத்திற்கு பின் பல்கலைக்கழகங்களின் ஆய்வுமையங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை மத்திய அரசு ஒதுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இந்த தகவலை சுற்று அறிக்கையாக அனைத்து பல்கலைக்கழகங்களின் மையங்களுக்கு அனுப்பியிருப்பதாகவும் அவர் கூறினார்.
இந்த நடவடிக்கை தலித் ஆய்வாளர்களிடத்தில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. அம்பேத்கர் தத்துவம், இடஒதுக்கீடு, சமூக ஏற்றத்தாழ்வுகள், சாதி ஒடுக்குமுறை குறித்து ஆய்வு நடத்தும் பல்கலைக் கழகங்களில் இருக்கும்  மையங்களுக்கு நிதி ஒதுக்காமல் வேதகால கல்விகளுக்கு நிதிஒதுக்கியிருப்பது நகைமுரணாக உள்ளது என டில்லி பல்கலைக் கழகத்தில் படித்துவரும் அம்பேத்கரிய சிந்தனையாளரான சுகுமார் என்பவர் கூறினார்.

டில்லியிலிருக்கும் ஜவஹர்லால் பல்கலைக் கழகத்தில் இதுபோன்ற ஓர் ஆய்வு மையத்தை மூடிவிட்டு அங்கிருந்தவர்களை வேறு துறைகளுக்கு மாற்றிவிட்டதாகவும், இதனால் பலர் வேலைவாய்ப்புகளை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் குற்றஞ் சாட்டியுள்ளனர்.