திருவனந்தபுரம்-
வெளிநாட்டுக்கு வரமறுத்த தந்தையை அவரது விருப்ப படியே தன்னுடன் அழைத்துச் சென்ற கேரள இளைஞரின் செயல் மனதை நெகிழ வைக்கிறது.
டேவிஸ் கிரமல் என்பவர் பஹ்ரைனில் பணியாற்றி வருகிறார். இவரது வயதான பெற்றோர் கேரளாவில் உள்ள மணமா என்ற கிராமத்தில் வசித்துவருகின்றனர். இவர்களுக்கு வயதாகிவிட்டதால் பஹ்ரைனில் தன்னுடன் வந்து இருக்கும்படி பலமுறை அவர் வேண்டுகோள் விடுத்துப்பார்த்தார்.
அவரது தந்தை அதற்குச் சம்மதம் தெரிவிக்கவே இல்லை. இதற்குக் காரணம் என்னவென்று அண்மையில்தான் அறிந்து கொண்டார் டேவிஸ். அது என்னவென்றால் காலில் செருப்பில்லாமலும் வேட்டியுடனும் பஹ்ரைன் வந்தால் அந்த நாட்டில் இருப்பவர்கள் தன்னை கேலி செய்வார்கள் என்று தந்தை நினைத்துக் கொண்டார். இந்த விசயம் தெரியவந்ததும் தந்தையிடம் இருந்த அச்சத்தை போக்கி தன்னுடன் வர சம்மதிக்க வைத்திருக்கிறார் அந்தப் பெரியவரின் மகன் டேவிஸ்.
பெற்றோருடன் பஹ்ரைனுக்குச் செல்லும் வழியில் விமானநிலையத்தில் எடுத்த போட்டோவை தனது முகநூலில் போட்டு இதுகுறித்த தகவலையும் பகிர்ந்துள்ள டேவிஸ், தனது தந்தை ஊர் திரும்பும் வரை தானும் வேட்டியில்தான் இருப்பேன் என்று தெரிவித்துள்ளார். இந்த முகநூல் பதிவு பலரது இதயங்களை உருகவைத்துள்ளது. இந்த முகநூல் பதிவுதான் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. டேவிஸூக்கு ஏராளமான பாராட்டுகளும், புகழுரைகளும் குவிகின்றன.