மதுரை:

“குடிநீர் தட்டுப்பாட்டை போக்க, 15 நாட்களில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று  உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “ தமிழ கத்தில், 2016ல் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பொய்த்தது. கடும் வறட்சியால் விவசாயம் பாதித்தது. நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விட்டது. அணைகள், கண்மாய்கள், குளங்கள், ஏரிகள் வறண்டு கிடக்கின்றன.

இதனால், கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மக்கள் மிகவும்  சிரமப்படுகின்றனர்.

ஆகவே, மக்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க, கலெக்டர்கள், மாநகராட்சி கமிஷனர்கள் மற்றும் நகராட்சிகள், ஊராட்சி நிர்வாகங்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

.இந்த மனுவை ஆராய்ந்த நீதிபதிகள், செல்வம், ஆதிநாதன்  ஆகியோர் அடங்கியஅமர்வு, “மக்களுக்கு தட்டுப்பாடின்றி, குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு, தமிழகத் தலைமைச் செயலர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலர், 15 நாட்களில் அரசாணை பிறப்பித்து, சுற்றறிக்கையாக அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும் அனுப்ப வேண்டும்” என்று உத்தரவிட்டது.