ஏழுமலை வெங்கடேசன்:
எப்போதும் நடிகர் கமல்ஹாசன் பேசினால், பலருக்கும் புரியாது. அதனால் கப்சிப்பென்று இருப்பார்கள். ஆனால் புதிய தலைமுறை டிவி பேட்டியில் ஓரளவுக்கு தெளிவாகவும் நேரடியாக சுட்டிக்காட்ட முயன்றும் அவர் கொடுத்த பேட்டி பலரையும் டென்சனாக்கிவிட்டிருக்கிறது.. அதிலும் குறிப்பாக ஆளுங்கட்சியான அதிமுகவினரை..
வழக்கம்போல, ஏன் முன்னரே பேசவில்லை? எல்லா விஷயங்களுக்கும் பாடம் எடுக்க இவன் என்ன யோக்கியனா? மூணு பெண்கள் ரிஜக்ட் செய்த மொக்க பீசுதானே என்றெல்லாம் கமலை அடித்து துவைக்கிறார்கள்.. அது பற்றி நமக்கு வேண்டாம்..அது மனநிலை பாதிக்கப்பட்ட விவகாரம்.
பிரபல நடிகனாக இருந்தாலும் ஒரு குடிமகனாய் அரசியல் பேச எனக்கு உரிமையிருக்கிறது. அதைப்போல் எல்லோரும் அரசியல் பேசவேண்டும் என்கிறார் கமல்.
இதன் அர்த்தம், எல்லாருமே எல்லா விஷயங்களிலும் அரசியல் பேச ஆரம்பித்தால், அரசியல்வாதிகளுக்கு ஒரு பயம் வரும். மக்களால் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறோம் என்ற உணர்வு வாட்டியெடுத்தால் தவறு செய்ய அஞ்சுவார்கள். லூசுத்தனமாக பேசும் கட்சித்தலைமையை பார்த்து நீங்கள் சொல்வது என்று ஒரு அடிமட்டத்தொண்டர் கூற ஆரம்பித்தால், தலைமைக்கு தொண்டர்கள் பற்றிய பயம் இருந்துகொண்டே இருக்கும்.
தவறுகளை தட்டிக்கேட்கும் அதே மனநிலை எல்லா தனிமனிதர்களுக்கும் வரவேண்டும் என்கிறார் கமல். தனி மனித சத்தியாகிரஹம் என்று அவர் பயன்படுத்திய வார்த்தை பலருக்கும் புரியவில்லை என்றே தோன்றுகிறது.
வரி கட்டுவது, உரிய ஆவணங்கள் வைத்திருத்தல் உட்பட சகல விஷயங்களிலும் நீங்கள் சரியாக இருந்தால், லஞ்சம் கேட்பவனை அவமானப்படுத்தமுடியும் என்கிறார்.
எதிர் வினையாற்றவேண்டிய இடங்களில் சரியாக செய்தால் அரசியல்வாதிகளும் சரி. அதிகாரிகளும் சரி, தர்மசங்கடத்திற்கு ஆளாவார்கள்..தொடர்ந்து நேர்மையால் அவர்களை தொந்தரவு செய்துகொண்டே இருந்தால் ஊழலும் தப்பு செய்கிற புத்தியும் அவர்களை விட்டுபோய்விடும் என்பதுதான் கமல் சொல்வதில் உள்ளார்ந்த அர்த்தம்..
எல்லா மட்டங்களிலும் மக்கள் தெளிவாக இருந்து குரல் கொடுக்க ஆரம்பித்தால் ஊழல்கள் இந்த அளவிற்கு புரையோடியிருக்கமுடியாது.
இலவசங்களை வாங்கிக்கொண்டு வாக்களித்த மக்களே மோசமான நிலைமைக்கு காரணம் என்கிறார் அவர்.. சொற்ப தொகைக்கு வாக்குகளை விற்றதால்தானே ஐந்து ஆண்டுகளுக்கு பொத்திக்கொண்டுபோகச்சொல்கிறான் அரசியல்வாதி என கோபத்தை நன்றாக வெளிப்படுத்தியுள்ளார்
எல்லா ஆவணங்களும் சரியாக இருந்து, ஒரு டிராபிக் கான்ஸ்டபிள் நம்மை மடக்கும்போது, கம்பீரமாகவே அவரை எதிர்கொள்வோம். இப்படியே பலரும் இருந்தால் என்ன நடக்கும்? சம்பளத்தில் மட்டுமே வாழ்ந்தாகவேண்டிய நிலைக்கு போலீஸ்காரர் வந்துவிடுவார்
பிரிட்டிஷ்காரன் நம்டை விட்டு போனதும், பயத்தினால் என்பதைவிட இதுமாதிரி ‘’சரியாக இருந்துகொண்டே தொல்லைகொடுத்தல்’’ என்கிற ஆயுதத்தினால்தான்,
முதலமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது திரைப்பட உலகில் பலகோடிகள் கடனாக ஆகும் அளவுக்கு தமக்கு பெரிய நெருக்கடிகள் கொடுக்கப்பட்டன என்பதை தெளிவாகவே குறிப்பிடுகிறார். இந்த விஷயத்தில் அவரை விமர்சிப்பவர்கள், அப்படியெல்லாம் இல்லவேயில்லை என்று ஆதாரங்களுடன் விளக்குவார்களா என்பது சந்தேகமே. ஜெயலலிதாவை பொறுத்தவரை அடக்குமுறையோடுகூடிய ஆடம்பர பிம்பமாகவே திகழ்ந்தார் என்பது அவரது குற்றச்சாட்டு.
காமராஜர், எம்ஜிஆர் போன்ற முதலமைச்சர்களை எளிதாக பார்க்கமுடிந்த தன்னால் அதற்கு பின்னால் வந்தவர்களை நெருங்கக்கூட முடியவில்லை என்கிறார்..இது உண்மைதானே. ஜெயலலிதாவை எப்போதுமே சாமான்யர்கள் சந்தித்துபேசக்கூடிய நிலைமை இருந்ததா என்றால் இல்லை என்பதுதானே உண்மை. அவரின் அமைச்சர்களே நேரில் பார்ப்பதை பெரிய பாக்கியமாக சொல்லிக்கொள்ளும்படியான நிலைமைதானே நீடித்தது.
கமல் பேட்டியில் முரணான விஷயங்களும் இருந்தன. நடுச்சபையில் பாஞ்சாலியின் சேலை உருவப்படும்போது ஆண்கள் வேடிக்கை பார்த்ததை சொல்லும் மஹாபாரதத்தைத்தானே இங்கே புனிதமாக பார்க்கிறார்கள் என்கிறார்.
எத்தனையோ பெரிய தவறுகள் செய்தாலும் தப்பித்துவிடலாம். ஆனால் ஒரு பெண்ணை மானபங்கப்படுத்தமுயன்றால் அவர்கள் வம்சமே அழிக்கப்பட்டுவிடும் என்பதைத்தான் உச்சகட்டமாக மஹாபாரதம் போதிக்கிறது என்பது அவருக்கு புரியவில்லை.
சாதி என்கிற விஷயம் ஒழிக்கப்படவேண்டும் என்கிறார். சாதிகளை ஒழிக்கமுடியாது என்பதுதான் நிதர்சமான உண்மை. மனித குலம் என்றைக்கு ஓரளவுக்கு தெளிவு பெற்றுவிட்டதோ, அன்றைக்கே பல விஷயங்கள் உருப்பெற்றுவிட்டன
ஒருபக்கம், பொய், கொலை, கற்பழிப்பு, விபச்சாரம் போன்ற சமாச்சாரங்கள் முளைக்க இன்னொரு பக்கம் குலத்தொழில், சாதி, மத அடையாளங்கள் முளைத்தன.
இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்பே புலால் உண்ணாமை, கல்லுண்ணாமை, பிறன் மனை நோக்கா என்றெல்லாம் பிரித்து பிரித்து வள்ளுவன் விளையாடியிருக்கான் என்றால் என்ன அர்த்தம்..? அனைத்துமே காலம்காலமாய் இருந்துவருகின்றன என்பதுதானே
சாதி, மதம்போன்றவை அவரவர் உற்றார் உறவினருடன் சேர்ந்து ஒரு சமூகமாக வாழக்கிடைத்த வெறும் அடையாளங்கள் அவ்வளவே.
கமலின் பிராமண சாதி அடையாளம் அவர் பெயரில் சேர்க்கப்படாவிட்டாலும் ஹாசன் என்கிற பெயர் பிற்சேர்க்கை, அவர் குடும்பத்தில் தொடர்ந்து அனைவருக்கும் வருகிறதே..அதுவே ஒரு தனி அடையாளத்தின் அம்சம்தானே.
தனது தாய் தந்தையர் பிராமணர்கள் என்றாலும் தான் பிராமிணன் இல்லை என்கிறார். அதே கமல், ஒருவனுடைய திருநீறை மற்றவர்கள் அழித்துவிட்டால் அவன் இந்து இல்லைஎன்றாகிவிடாது.. சிலுவையை அறுத்துவிட்டால அவனுக்குள் கிறிஸ்துவ உணர்வு மங்கிவிடாது என்றும சொல்கிறார்.
சாதி மத விஷயத்தை பொருத்தவரை. அங்கே கீழேமேலே என பேதம் பார்ப்பதால்தான் பிரச்சினையே.. நேரடியாக விஷயத்துக்கு வருவோம் நாளைக்கே அரசாங்கம், இனி சாதி ஒன்றே இல்லை. யாரும் சாதியைப்பற்றியே பேசக்கூடாது, அனைவரும் சரிசமம் என்று அறிவித்து பார்க்கட்டும்.
முதலில் எதிர்ப்பது, சாதிகளின் அடைப்படையில் இடஒதுக்கீட்டால் பலன் பெறும் அத்தனை சமூகங்களாகத்தான் இருக்கும். எங்களுக்கு விடிவு பிறந்துவிட்டது என்றெல்லாம் மகிழ்ச்சியோடு சொல்லமாட்டார்கள். ஒடுக்கப்பட்ட இடத்தில் இருந்து முன்னேறி வருபவர்களின் வலி அவர்களுக்குத்தான் தெரியும்..
பேட்டியில் எதையெதையோ சொல்லவந்து, தயங்கும் கமல், மொத்தத்தில் இந்த உலகம் நல்லதாகவே இருக்கவேண்டும் என சொல்லவில்லை மோசமாய் இல்லாமலிருக்ககூடாதா என்றுதான் அவர் பாஷையில் கேட்கிறார்.