கோவை:

ஆயுதப்படை சட்டத்திற்கு எதிராக 16 ஆண்டுகள் மணிப்பூரில் உண்ணாவிரதம் இருந்தவர் ஐரோன் சர்மிளா. இவர் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டு நடந்து முடிந்த மணிப்பூர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டார். வெறும் 90 ஓட்டுக்களை மட்டுமே இவர் பெற்று படுதோல்வி அடைந்தார்.

அரசியலுக்கே முழுக்கு போடுவதாக அறிவித்த இவர் தற்போது கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அட்டப்பாடி தியான மையத்தில் ஒரு மாத காலம் தங்குவதற்காக சென்றுள்ளார்.

செல்லும் வழியில் சமூக ஆர்வலரான ஐரோன் சர்மிளா கோவை விமானநிலையம் வந்தார். அங்கு அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘மணிப்பூரில் பாஜக ஆட்சி அமைக்க முயற்சிக்கும் விதத்தை பார்த்தால் சட்டமன்ற தேர்தலில் அக்கட்சி பண பலத்தையும், அதிகார பலத்தையும் பயன்படுத்தியிருப்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.

தேர்தல் முடிவுகள் என்னை ரொம்ப பாதித்துள்ளது. அதனால் சொந்த மாநிலத்தில் இருந்து சில நாட்கள் வெளியில் இருக்க முடிவு செய்து கேரளாவுக்கு செல்கிறேன்’’ என்று தெரிவித்தார்.