நக்சல் தாக்குதலில் உயிரிழந்த சங்கர் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதி உதவி வழங்க உள்ளதாக தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். .
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
”சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டத்தில் நக்ஸல் தீவிரவாதிகள் நேற்று தாக்குதல் நடத்தினார்கள். இதில், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மத்திய ரிசர்வ் காவல் படை துணை ராணுவ வீரர் சங்கர் உயிரிழந்துள்ளார். இவர், விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் வட்டம், கழுமரம் கிராமத்தைச் சேர்ந்த கதிர்வேல் என்பவரின் மகன் ஆவார்.
இதை அறிந்து நான் மிகுந்த துயரமும், மன வேதனையும் அடைந்தேன். வீரர் சங்கரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
சங்கரின் குடும்பத்திற்கு இருபது லட்சம் ரூபாய் உடனடியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்” என்று முதல்வர் பழனிசாமி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.