டில்லி,

செல்லாத பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற முடியாது என்று மத்திய அரசு சுப்ரீம்கோர்ட்டில் தெரிவித்து உள்ளது.

மதிப்பிழப்பு குறித்து கடந்த ஆண்டு மத்திய அரசு அறிவித்ததைத்தொடர்ந்து செல்லாத 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுளை டிசம்பர் 30ந்தேதிகளுக்குள்  வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவித்தது. பின்னர் மார்ச் 30ந்தேதிவரை ரிசர்வ் வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் அறிவித்தது.

ஆனால், ரிசர்வ் வங்கி பணத்தை மாற்றிக்கொடுக்க மறுத்தது. இதை எதிர்த்து, பலர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு கடந்த 6ந்தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதி மன்றம்,  மார்ச் 31-ம் தேதி வரை செல்லாத ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என ஏற்கெனவே பிறப்பி க்கப்பட்ட உத்தரவு தொடர்பாக மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை 10ந்தேதிக்கு ஒத்தி வைத்தது..

அதைத்தொடர்ந்து 10ந்தேதி மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது, அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி கூறியதாவது,

செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பைத் தொடர்ந்து, டிசம்பர் 30 வரை பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள அவகாசம் அளிக்கப்பட்டது.  மேலும், அதற்கு பிறகு  பழைய செல்லாத ரூபாய் நோட்டுகள் வைத்திருப்பது சட்டவிரோதம் என, சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

அதன் காரணமாக, பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள மார்ச், 31 வரை அவகாசம் அளிக்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய அரசின் இந்த ஏமாற்று அறிவிப்பால் ஏழை எளிய மக்கள் தங்களிடம் இருந்த ஒரு சில பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற முடியாமல் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.