லக்னோ-
உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது.

403 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட உத்தரபிரதேச மாநிலத்தில் பாஜக 299 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இதனை பாஜக ஆதரவாளர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து ஆளும் சமாஜ்வாதி கட்சி 74 இடங்களிலும், பகுஜன் சமாஜ்வாதி கட்சி 21 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.

வட மாநிலங்களில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் மிகவும் முக்கியமானது ஹோலி. இந்த பண்டிகை நாளையும், நாளைமறுநாளும் கொண்டாடப்படும். ஆனால் உத்தரபிரதேச தேர்தலில் பா.ஜ.க அபார வெற்றி பெற்றுள்ளதால் அங்கு ஹோலி கொண்டாட்டம் இன்றே களைகட்ட தொடங்கி விட்டது.

வெற்றியை கொண்டாடும் விதமாக பா.ஜ க தொண்டர்கள்  இன்றே ஒருவருக்கொருவர் கலர் பொடிகளை  தூவி கொண்டாடி வருகின்றனர். .