ஒரே தவணையில். தன் நிறுவனங்கள் மீதான வங்கிகளுக்கான கடன்களை திருப்பி செலுத்த தயார் என பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா கூறியிருக்கிறார்.
கர்நாடகாவை சேர்ந்த பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா. இவர் தனது நிறுவனங்களின் வளர்ச்சிக்காக பொதுத்துறை வங்கிகளிடம் சுமார் ரூ.9 ஆயிரத்து 380 கோடி கடன் வாங்கியிருந்தார்.
தொழில் நஷ்டம் அடைந்ததன் கரணமாக வாங்கிய கடனை திருப்பி செலுத்தாமல் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தேதி லண்டனுக்கு ஓடி விட்டார்.
அவர் மீது பல்வேறு கோர்ட்டுகளில் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு நிலுவையில் உள்ளது. ஆனால், மல்லையாவோ எதற்கும் கவலைப்படாமல் லண்டனில் ஜாலியாக வசித்து வருகிறார்.
இந்நிலையில், தன் மீதுள்ள வங்கிகளுக்கான கடன்களை ஒரே தவணையில் திருப்பி செலுத்த தயார் என விஜய் மல்லையா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
“ஒரே தவணையில் கடன்களை திருப்பி செலுத்துவதற்கான கொள்கை பொதுத்துறை வங்கிகளிடத்தில் உள்ளது. நூற்றுக்கணக்கான கடனாளிகள் இந்த முறையில் கடன்களை திருப்பி செலுத்தியுள்ளனர். அப்படியிருக்க எங்களுக்கு மட்டும் இது மறுக்கப்படுவது ஏன்?
உச்ச நீதிமன்றத்தில் இதற்கான கோரிக்கையை நாங்கள் வைத்தபோது வங்கிகள் அதனை பரிசீலனை செய்யாமலேயே நிராகரித்து விட்டன.
எனவே, உச்ச நீதிமன்றம் இதில் தலையிட்டு வங்கிகளுக்கு, பேச்சுவார்த்தைக்கான அறிவுரைகளை வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்று கூறி உள்ளார்.