சியோல்-

தென் கொரியா அதிபர் பார்க் குன் ஹை பதவியில் இருந்து நீக்க நாடாளுமன்றம் கொண்டு வந்த தீர்மானத்தை அந்நாட்டின் தலைமை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

தென்கொரிய நீதிமன்றத்தால் இன்று வழங்கப்பட்ட இந்தத்தீர்ப்பு அந்நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பாகும்.

இந்தத் தீர்ப்பு பார்க் குவென் ஹையின் அரசியல் பயணத்துக்கு பெரும் வீழ்ச்சியாகவும் பார்க்கப்படுகிறது.

அதிபர் பார்க் குவைன் ஹையின் நெருங்கிய தோழியான சோய் சூன் சில், கடந்த ஆண்டின் இறுதியில் ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டார். அதிபருடனான நெருக்கத்தைப் பயன்படுத்தி போலி தொண்டு நிறுவனங்கள் பெயரில் நிதி திரட்டியதாகவும் அரசுப் பணி நியமனங்களில் தலையிட்டதாகவும் அவர் மீது  குற்றஞ் சாட்டப்பட்டது.

இந்த ஊழல் விவகாரங்களுக்குப் பொறுப்பேற்று அதிபர் பார்க் குவென் ஹையின் பதவி விலகக் கோரி நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. 70% தென் கொரிய மக்கள் பார்க் குவென் ஹை பதவி விலக வேண்டும் என்று தங்களது விருப்பத்தைத் தெரிவித்தனர்.

மூன்று எதிர்க்கட்சிகள் சார்பில் அதிபருக்கு எதிரான குற்ற விசாரணை தீர்மானம் அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் கடந்த டிசம்பர் மாதம் தாக்கல் செய்யப்பட்டது.

 

இதனைத் தொடர்ந்து பார்க் குவென் ஹையின் 6 மாதங்களுக்கு அவர் தற்காலிகமாக பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் நாடாளுமன்ற தீர்மானத்தை தென் கொரிய நீதிமன்றம் இன்று உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.

நீதிமன்ற தீர்ப்பு காரணமாக தென்கொரியாவில் விரைவில் அதிபர் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிபர் பார்க் குவென் ஹையின் நீக்கத்தை எதிர்த்து பலர் போராட்டங்களில் ஈடுபட்டுவரும் நிலையில் அதைக்கண்டித்தும் பலர் எதிர்ப்போராட்டங்களில் ஈடுபட்டுள்ளதால் தென்கொரியாவில் பதற்றமான சூழல் நிலவுகிறது.